புத்தளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வேப்பமடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதை ஆராய்வதற்கு புத்தளம் பிரதேச செயலக பதில் செயலாளர் சம்பத் வீரசேகர நேற்று சனிக்கிழமை (24) நேரில் சென்று பார்வையிட்டபோது, சட்ட விரோதமாக மணல் ஏற்றும் வேலையில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டு, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, மணல் ஏற்ற பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டது.
வேப்பமடு பகுதியில் பல காலமாக சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச செயலாளரிடம் சென்று முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டுக்கமைய, நேற்று காலை குறித்த இடத்துக்குச் சென்று, மணல் அகழ்ந்து எடுக்கப்படும் இடத்தை பார்வையிட்டார்.
இதன்போது, குளத்தை அண்டிய பகுதியில் மணலை சட்ட விரோதமாக ஏற்றிக்கொண்டிருந்த சிலர் கையுங்களவுமாக பிடிபட்டனர்.
அதன் பின்னர், பதில் செயலாளர் புத்தளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்க, அப்பகுதிக்கு புத்தளம் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் வந்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து, மணல் ஏற்ற பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சம்பத் வீரசேகர தெரிவித்தார்.