கடலட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடல் பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிப்பு

111 0
கடலட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால், எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில்தான் காட்ட முடியும் என மெசிடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர் விவேகி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (24) உலக வங்கியின் அறிக்கை தொடர்பாக கடற்தொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் வளமான கடல் பகுதிகளில் கடல் வேளாண்மை என்ற பெயரில் அட்டை பண்ணைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

பாரம்பரியமாக கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலையில், அவர்கள் மாற்றுத் தொழில்களுக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத அளவுக்கு கடல் சேற்றுக்கடலாக மாற்றப்பட்டு வருவதால், எமது எதிர்கால சந்ததியினருக்கு மீன் இனங்களை காட்ட முடியாத சூழ்நிலை உருவாகும்.

தற்போது அலங்கார மீன்கள் கண்காட்சிக்காக வைக்கப்படும் நிலையில், நாம் காலங்காலமாக கடல் உணவாக உண்டு வந்த மீன்களை, மீன் கண்காட்சிகளில்தான் எமது எதிர்கால சந்ததியினருக்கு காட்டவேண்டிய சூழ்நிலை ஏற்படப்போகிறது.

மீன் உற்பத்திக்கு, கருவாட்டு உற்பத்திக்கு பெயர்போன மன்னார் மாவட்டத்தில் கோழிகளுக்கு உணவாக போடுகின்ற மண்டத்திரலி மற்றும் செங்கன்னியை உணவு தேவைக்காக இன்று மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமல்லாமல், சீனாவில் இருந்து பிளாஸ்டிக் முட்டைகள் இறக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சீனா செயற்கை மீன்களையும் உணவுக்காக உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.

வடக்கில் இயற்கையாக மீன் இனங்கள் கிடைக்கும் கடல் பகுதிகளை ஆக்கிரமித்து தனது நாட்டுக்கு தேவையான அட்டைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிலையில் எமது மக்கள் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை உணவாக உட்கொள்கின்றனர்.

இயற்கை நீரோட்டங்களை மறித்து, கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டு வருவதால் மீன் இனப்பெருக்கம் குறைவடைந்துள்ள நிலையில், பிடிபடும் மீன்கள் வெளிநாடுகளுக்கும் ஆடம்பர விடுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

ஆகவே, வட பகுதியில் மட்டுமல்ல, இலங்கையிலும் யாரும் உணவுத் தேவைக்காக பயன்படுத்தாத கடலட்டையை ‘டொலர் பெறப் போகுறோம்’ எனக் கூறி அந்நிய நாட்டவர்களுக்கு கொடுத்து, எமது கடல் வளத்தை அழிக்க இடங்கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.