தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்க மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார். தேர்தல் வேண்டுமா, இல்லையா என்பதை தீர்மானிக்க மக்கள் வாக்கெடுப்புக்கு செல்வது முறையற்றது.
ஜனாதிபதியின் இந்த முறையற்ற செயலுக்கு பொதுஜன பெரமுன பங்காளியாகப் போகிறதா என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
நாவல பகுதியில் சனிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார பாதிப்பால் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 58 இலட்ச குடும்பங்களில் 11 இலட்ச குடும்பங்களின் ஒருநாள் வருமானம் 900 ரூபாவாக காணப்படுவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சுமார் 17 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது. ஆளுந்தரப்பின் உறுப்பினர்களும் இந்த செயற்திட்டம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள அஸ்வெசும செயற்திட்டம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
தான் செய்வது சரி என்ற தன்னிச்சையான நிலையில் இருந்துகொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார். அவர் சார்பாகவே அரசாங்கம் செயற்படுகிறது.
தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த நாட்டு மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, தேர்தல் ஒன்று அவசியமில்லை என்று மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இன்றளவும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. தேர்தல் வேண்டுமா, இல்லையா என்பதற்காக மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது முறையற்றது. ஜனாதிபதியின் முறையற்ற செயலுக்கு பொதுஜன பெரமுன பங்காளியாகுமா என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.