குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தை வெளிப்படை தன்மையின் முன்னெடுக்கவும், தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கவும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
சமுர்த்தி பயனாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் நிவாரண தொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பரசீலனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அரச நிவாரண வழங்கல் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அஸ்வெசும நிவாரண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விசேட ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நிவாரண திட்டத்தில் குடும்ப அடிப்படையிலான பயனாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிரதேச சபை ஊடாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம். அத்துடன் தகுதியற்ற ஒருவரின் பெயர் நிவாரண திட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் எவரும் உரிய பிரதேச சபையில் முறைப்பாடு செய்வோம்.
குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும். அத்துடன் நீரழிவு நோயாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் பயனாளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் இருவார காலப்பகுதிகளுக்குள் வெளியிடப்படும்.
அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோரப்படும். இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யாதவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க முடியும்.
ஆகவே அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கபடுகிறது. ஒருதரப்பினரது கோரிக்கைக்கு அமைய செயற்திட்டத்தை இடைநிறுத்த முடியாது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை ஆராய்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.