லஞ்சம் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிற வாசகங்களை அரசு அலுவலகங்களில் அதிகம் பார்த்திருப்போம். கொட்டை எழுத்துக்களில் பெரிதாக பொறிக்கப்பட்டிருக்கும் இந்த லஞ்சத்துக்கு எதிரான வார்த்தைகளை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
தங்களது வேலை முடிந்தால் போதும் என நினைத்து லஞ்சம் கொடுப்பதற்கு தயங்காத பொது மக்கள்…. கடமையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் என அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்தாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதால் அதன் மூலமாகவே லஞ்ச பணமும் கைமாறி விடுகிறது.
அரசு அலுவலகத்தில் வைத்தோ அல்லது வெளி இடங்களில் வைத்தோ லஞ்சம் வாங்கினால் ஆபத்து என நினைத்து ஆன்லைன் மூலமாக பணத்தை அனுப்பி விடுங்கள். நான் வேலையை முடித்து தருகிறேன் என் வாக்குறுதி அளிக்கும் அரசு அலுவலர்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமே லஞ்ச பணத்தை பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இதனால் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை. இது லஞ்ச வழக்குகளை கையாளுவதில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெரிய சவாலாகவே மாறியிருக்கிறது. இதன் காரணமாக லஞ்ச வழக்குகளும் குறைவாகவே பதிவாகியுள்ளன. சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டில் மே மாதம் வரையில் மொத்தம் 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பல்லாவரத்தில் மட்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டில் லஞ்ச புகார்கள் தொடர்பாக 74 வழக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் 2020-ல் 67 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 44 வழக்குகளும், 2022-ல் 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேகம் எடுக்கும் முன்பு ஆண்டுதோறும் 250 வழக்குகள் வரை பதிவாகி வந்துள்ளது. இதில் சுமார் 120 வழக்குகள் வரையில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட வழக்குகள் ஆகும். இந்த ஆண்டு இதுவரையில் தேனி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் எந்த லஞ்ச வழக்குகளும் பதிவாகவில்லை. அதே நேரத்தில் வடக்கு மண்டலத்துக்குட் பட்ட கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடலூரில் அதிகபட்சமாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அளவிலான வழக்குகளே பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பம் இல்லாத ஒருவர் புகார் அளிக்கும் பட்சத்தில், லஞ்சம் கேட்கும் நபரிடம் அவரை பேச சொல்லி அது தொடர்பான ஆடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்ள முதலில் அறிவுறுத்துவோம்.
பின்னர் லஞ்சமாக கொடுக்கும் பணத்தில் ரசாயன பவுடரை தடவி கொடுத்து அந்த பணத்தையே லஞ்சம் கேட்கும் நபரிடம் கொடுக்கச் சொல்லி கையும் களவுமாக பிடித்து கைது செய்வோம். இந்த முறையில் லஞ்சம் வாங்கும் நபருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது எளிதாக இருக்கும். தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாகவும் லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.