டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் உடைந்தது எப்படி?

87 0

நியூஃபவுண்ட்லேண்ட்: டைட்டானிக் கப்பல் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஈடுபட்டது.

இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இதில் பைலட் உட்பட 5 பேர் பயணம் செய்ய முடியும். ஆழ்கடல் ஆய்வுக்கான நிதியை திரட்ட, டைட்டன் நீர்மூழ்கியில் சாகச சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தை ஓசன்கேட் தொடங்கியது. இந்த சாகச சுற்றுலா மூலம், டைட்டானிக் கப்பலை பார்வையிட ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 46 சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

இதேபோல் டைட்டன் நீர்மூழ்கி பயணம் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் நகரில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங், இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜாடா மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால் ஹென்றி, ஓசன்கேட் சாகச சுற்றுலா நிறுவனத்தின் சிஇஓ.,வும், நீர்மூழ்கியின் பைலட்டுமான ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணம் செய்தனர்.

டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்ட 1 மணி நேரம் 45-வது நிமிடத்தில், அதன் தகவல் தொடர்பு தாய் கப்பலுடன் துண்டானது. இதையடுத்து டைட்டன் நீர்மூழ்கியை தேடும் பணி தொடங்கியது. கடந்த 5 நாட்களாக டைட்டன் நீர்மூழ்கியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் 96 மணி நேரத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருந்ததால், தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்கடலில் சத்தம் கேட்டதாக சோனார் கருவியில் தகவல் பதிவானது. இதனால் அந்தப் பகுதியில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மீட்பு பணியில் விக்டர் 6000 என்ற ரோபோவும் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்திலிருந்து 1,600 அடி ஆழத்தில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் சிதறி கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்தது.

உடைந்தது எப்படி?: ஆழ்கடலில் அதிக அழுத்தம் காரணமாக டைட்டன் நீர்மூழ்கி உடைந்து சிதறியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு ஆய்வு மேற்கொண்ட பிறகே, டைட்டன் நீர்மூழ்கியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது பற்றி உறுதியான தகவல் தெரியவரும். இதில் பயணம் செய்த 5 பேரும்
உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அழுத்தத்தில் நீர் மூழ்கி சிதறியதாக கருதப்படுவதால், இதில் பயணித்தவர்களில் உடல் பாகங்களை மீட்பதற்கான வாய்ப்பு இல்லை என ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரிச்சர்டு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. டைட்டன் நீர் மூழ்கியில் பயணித்தவர்களின் நினைவுகள், அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்’’ என கூறியுள்ளார்.

டைட்டன் நீர்மூழ்கியின் பைலட் ஸ்டாக்டன் ரஷ்(61) ஓசன்கேட் நிறுவனத்தை தொடங்கி, கடந்த 2009-ம் ஆண்டு டைட்டன் நீர்மூழ்கியை உருவாக்கினார். இவர் கடந்த 1981-ம் ஆண்டு தனது 19-வது வயதில் யுனைடட் ஏர்லைன் விமான பயிற்சி மையத்தின் கேப்டன் ஆகி, உலகில் மிகவும் இளம் வயது போக்குவரத்து விமான பைலட் என்ற பெருமையை
பெற்றவர்.

ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். டைட்டன் நீர்மூழ்கியில் பல முறை ஆழ்கடல் பயணம் மேற்கொண்டவர், தற்போது மோசமான விபத்தில் இறந்துள்ளார்.

இதேபோல் டைட்டன் நீர்மூழ்கியில் பயணம் செய்த இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங் கடந்த 2021-ம் ஆண்டு ஆழ்கடல் பயணம் மேற்கொண்டுள்ளார். கடலின் மிகவும் ஆழமான தரைப் பகுதியாக கருதப்படும், மேற்கு பசிபிக் கடலின் ‘மரியனா டிரன்ச்’ என்ற இடத்தில் 4 மணி நேரம் 15 நிமிடங்கள் பயணம் செய்துள்ளார். இதன் ஆழம் 36,000 அடி. டைட்டானிக் கப்பல் இருக்கம் ஆழத்தைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழமான பகுதிக்கு இவர் ஏற்கெனவே சென்று வந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால் ஹென்றியும்(77) பலமுறை ஆழ்கடல் பயணம் மேற்கொண்டு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை 12 முறை பார்வையிட்டுள்ளார். இதனால் இவருக்கு மிஸ்டர்டைட்டானிக் என்ற பட்டப் பெயரும் உள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தையும், மகனும் முதல் முறையாக ஆழ்கடல் பயணத்தில் ஈடுபட்டவர்கள்.