தகுதி இருந்தும் நிவாரண திட்டத்தில் பெயர் இடம்பெறாதவர்கள் மேன் முறையீடு செய்யலாம்

96 0

குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெருமளவானவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன் தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில்  இடம் பெறவில்லை என்றால் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும்  என பிரதமர் தினேஷ் குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே. பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் அஸ்வெசும  நிவாரணத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான மதிப்பீடு தொடர்பில் சபையில் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அந்த வகையில் கடந்த மாதத்தில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் சமூகமளிக்காததன் காரணத்தினால் தகைமைகளைக் கொண்ட இளைஞர்கள் சிலரை சுயாதீனமாக  சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கிணங்க நலன்புரி சபை அந்த சவாலை பொறுப்பேற்று முதலாவது சுற்றை எமது அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்திலும், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பாதுகாப்பதற்கான இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அதனை மேலும் விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மதிப்பீடுகளில் குறைபாடுகள் காணப்படுமாயின் வசதி படைத்தவர்களுக்கும் இந்த நிவாரணத்தை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். எவ்வாறாயினும் வசதி படைத்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட முடியாது.

தகைமையானவர்கள் சிலரின் பெயர்கள் இந்த நிவாரணப் பட்டியலில்  இடம் பெறவில்லை என கூறப்படும் போதும் அவர்கள் அதற்காக மேன்முறையீடு செய்ய முடியும். மேன் முறையீடுகளுக்கான காலம் இன்னும் நிறைவடையவில்லை.

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்குள், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோரை எந்த விதத்திலும் இந்த திட்டத்திலிருந்து நீக்க முடியாது. அதனால், அதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பிரச்சினைகள் உள்ளவர்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வாறெனினும்  முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை பெரும்பாலானவர்களுக்கு இந்த நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கின்ற ஒத்துழைப்புக்களை மேலும் அதிகமாக எமக்கு பெற்றுக் கொள்ளவும் முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.