சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள்

139 0

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு குறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தி பேராசிரியர்களான ஜயதேவ உயன்கொட, அர்ஜுன பராக்கிரம, சுமதி சிவமோகன் ஆகியோர் உள்ளிட்ட 156 தனிநபர்களும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், சட்ட மற்றும் சமூக நிதியம், தேசிய சமாதானப்பேரவை உள்ளிட்ட 25 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையகாலங்களில் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் மற்றும் அச்சட்டப்பிரயோகத்தின் ஊடாகக் கருத்துச்சுதந்திரம் மீறப்படல் என்பன தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டுள்ளோம்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமென உருவாக்கப்பட்ட இச்சட்டத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சட்டத்தரணிகளை மௌனிக்கச்செய்வதற்கும், அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் பயன்படுத்திவருகின்றது.

அதன் ஓரங்கமாக அண்மையில் நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோர் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்நாட்டில் தனிச்சட்டமாக நிறைவேற்றப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதென்பது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் சார்ந்த இலங்கையின் அணுகுமுறை தொடர்பான முக்கிய அளவுகோலாகும்.

அவ்வாறிருக்கையில் அண்மையகாலங்களில் இலங்கையினால் இச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது.

எனவே இச்சட்டத்தின் தவறான பயன்பாடு, அச்சட்டத்தின் ஊடாக இலக்குவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் தரப்பினருக்கு மாத்திரமன்றி, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமைகளைக் கையாளும் முறைமை குறித்தும், இச்சட்டப்பிரயோகம் மீதான தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் பெருமளவுக்குக் கவனம் செலுத்தவில்லை என்பதை அண்மையில் இடம்பெற்ற கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தேசிய ரீதியான அல்லது இன, மதரீதியான வெறுப்பைத் தூண்டுவதை கருத்துச்சுதந்திரத்தை நசுக்குவதற்கான ஆயுதமாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்திவருகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தனிநபர்களின் கருத்துக்களுக்காக அவர்களை இலக்குவைப்பதற்கும், பகிரங்கமாக அச்சுறுத்துவதற்குமான துணிச்சலை பேரினவாதக்குழுக்களுக்கு வழங்கியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும், அச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.