விமானிகளின் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்க வேண்டும் : சஜித்

78 0

ஸ்ரீலங்கன் விமான சேவையில் விமானிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாகவும், இந்த நிலைமையானது பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த அவர், இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 6 மாதங்களின் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவையிலிருந்து 70 விமானிகள் இராஜினாமா செய்துக் கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கன் விமானசேவையில் தற்போது, 260 இற்கும் குறைவான விமானிகளே சேவையில் உள்ளார்கள்.

இவ்வாண்டில் மேலும் 18 விமானிகள் இராஜினாமா செய்து, எமிரேட்ஸ் விமான சேவையில் இணையவுள்ளார்கள்.

எமது நாட்டுக்கு 330 விமானிகள் தேவைப்படும் நிலையில், 260 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளார்கள்.

இது விமானிகளுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான விடயமாகும். விமானிகள் தங்களின் பணி நேரம் முடிந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும். இது சர்வதேச சட்டமாகும்.

இது இவ்வாறு இருக்க, விமானிகளின் தட்டுப்பாட்டினால் தற்போது பணியிலுள்ள விமானிகளின் ஓய்வு நேரம் மட்டுப்படுத்தப்படும்.

சுற்றுலா காலம் வந்துவிட்டால், இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது மட்டுமன்றி, பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதொரு விடயமாகும்.

எனவே, விமானிகளின் பற்றாக்குறைக்கு அரசாங்கம் உரியத் தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.