3 இலட்சம் பேரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புவதே எமது இலக்கு

82 0

மூன்று இலட்சம் இலங்கையர்களை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதே இலக்காகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான  கேள்வி நேரத்தின்போது தயாசிறி ஜயசேகர எம் பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில ளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக 41நாடுகளில் இருந்து அனுமதிகள் கிடைத்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து 12 லட்சத்து 73 ஆயிரத்து 428 பேருக்கான அனுமதி கிடைத்துள்ளன.

அந்த வகையில் 3 இலட்சம் பேரை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதற்கான இலக்கையே நாம் கொண்டுள்ளோம்.

அனைத்து நாடுகளுக்கும் வேலை வாய்ப்புக்காக செல்லும் போது அந்தந்த நாடுகளில் புழக்கத்தில் உள்ள மொழிகளை தெரிந்திருப்பது சிறந்ததாகும்.

ஜப்பானுக்கு செல்வோருக்கு ஜப்பான் மொழியும் கொரியாவுக்கு செல்வோருக்கு கொரிய மொழியும் தெரிந்திருப்பது அவசியமாகும். மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் அரபு மொழி தெரிந்திருத்தல் அல்லது பொதுவாக ஆங்கில மொழி தெரிந்திருத்தல் அவசியமாகும் என்றார்.