பேராதனை பல்கலைக்கழக சிறுவர் வைத்தியசாலையில் மரணமடைந்த சிறுவனின் மரணத்துக்கு ஹெவிகென் என்ற மயக்க மருந்துதான் காரணம் என்பது எந்தளவு ஏற்புடையது என தெரியாது. ஏனெனில் குறித்த மயக்க மருந்து பாதிப்பு அதிகம் என்பதால் அது சிறுவர்களுக்கு ஏற்றப்படுவதில்லை. சிறுவர் வைத்தியசாலைகளுக்கு வழங்குவதும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஹெவிகென் மயக்க மருந்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (22) சபையில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் பேராதனை சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரமே ஹெவிகென் மயக்க மருந்து தொடர்பான இரண்டு மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பாக விஞ்ஞான ரீதியான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட வைத்தியர் மற்றும் சிலர் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
சிறுவர் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறிப்பிடுவதாக இருந்தால், உண்மையில் அவ்வாறான மயக்க மருந்து சிறுவர்களுக்கு பயன்படுத்துவதில்லை. அதன் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அவற்றை சிறுவர் வைத்தியசாலைகளுக்கு வழங்குவதில்லை.
அதனால் குறித்த சிறுவனின் மரணத்துக்கு மயக்க மருந்துதான் காரணம் என்பது எந்தளவுக்கு ஏற்புடையது என தெரியாது. ஏனெனில் அத்தகைய மருந்து சிறுவர்களுக்கு ஏற்றுவதில்லை. அதன் பாதிப்பு அதிகம் என்பதால் பெரியவர்களுக்கு மாத்திரமே குறித்த மயக்க மருந்து தடுப்பூசி ஏற்றப்படுகிறது. அதனால் இந்த மரணத்துக்கான காரணத்தை தேடிப்பார்க்க வேண்டும்.
அத்துடன் இந்த இரண்டு வைத்தியசாலைகளில் மாத்திரமே அது தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏனைய எந்த ஒரு வைத்தியசாலையிலும் அது தொடர்பான எந்த சம்பவமும் பதிவாகவில்லை என்றார்.