17 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களை குறைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை

75 0

வெளிநாட்டு அரசமுறை கடன்களில் 17 பில்லியன் டொலரை ஐந்து வருடகாலத்துக்கு குறைத்துக் கொள்ளுமாறு பிரதான நிலை கடன் வழங்குநர்களிடமும்,சர்வதேச பிணைமுறி விநியோகஸ்தர்களிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பு  ஏற்படாத வகையில் தேசிய கடன் மறுசீரமைக்கப்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல அரசியல் கட்சிகளிடம் பலமுறை வலியுறுத்தினார். நெருக்கடியான சூழலில் எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஆனால் தற்போது குறைகளை மாத்திரம் முன்வைக்கிறார்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் மக்கள் தம்மை மறந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காண்பிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் தற்போது செயற்படுகிறார்கள்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தற்போது குறிப்பிடப்படுகின்றன.இலங்கை சர்வதேசத்திடமிருந்து இன்றளவில் 80 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளது.

வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க இரு மற்றும் பல்தரப்பு மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடன் மறுசீரமைப்பு சாதகமான தன்மையில் உள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஐந்து வருட காலத்தை உள்ளடக்கிய வகையில் 17 பில்லியன் டொலரை குறைத்துக் கொள்ளுமாறு பிரதான நிலை கடன் வழங்குநர்கள், பிணைமுறி விநியோகஸ்தர்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.

வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்கும் போது தேசிய கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய கடன்களை மறுசீரமைக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பினால் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு  நிவாரணம் வழங்க புதிய மானிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்  என்பதில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

ஊழலை இல்லாதொழிக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.வெகுவிரைவில் ஊழல் எதிர்ப்பு  சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. உணவு பணவீக்கம்,உணவல்லாத பணவீக்கம், வட்டி வீதம் ஆகியன குறைவடைந்துள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறந்தது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.ஆகவே அரசாங்கத்துக்கு சார்பாக மக்கள் செயற்படுவார்கள் என்றார்.