தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் மந்தபோசணை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய இரு மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் மந்தபோசணை குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் போசணைசார் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு அவசியமான நிதியுதவியை நியூஸிலாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் வழங்கியுள்ளது.
அந்நிதியுதவியைப் பயன்படுத்தி ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டத்தில் மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 2250 குடும்பங்களில் மந்தபோசணை குறைபாட்டினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதுடன் அவர்களின் போசணைசார் தேவைகளைப் பூர்த்திசெய்தல், போசணை மிகுந்த உணவை பெற்றுக்கொள்வதற்கான அவர்களது இயலுமையை மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்லெற்றன், ‘இலங்கையில் சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்படும் நிலையை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்குடன் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இம்முக்கிய செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையில் வறிய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்களும் போசணைமிக்க உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.