யேர்மனி வூப்பெற்றால் தமிழாலய நிர்வாகியின் பணிநிறைவுப் பெருவிழா.

743 0

பணிநிறைவைப் பெருவிழாவாக்கிப் பணியாரங்கள் சுமந்துவந்து பாராட்டி வழியனுப்பிய வூப்பெற்றால் தமிழ் உறவுகள் …
தமிழ் மொழிக்கும் தமது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் தன்னலமற்று உழைத்த ஒரு பணியாளரை எப்படி மதிப்பளித்து அவரின் பணிநிறைவைக் கொண்டாட வேண்டுமென்பதை வூப்பெற்றால் நகரத்துத் தமிழ் உறவுகள் கடந்த 11.03.2017 சனிக்கிழமை செய்து காட்டிள்ளார்கள்.

வூப்பெற்றால் தமிழாலயம் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் ஒரு மூத்த தமிழாலயமாகும். 1991 ஆம் ஆண்டு திரு பீற்றர் அவர்களின் நிர்வாகத்தில் ஆரம்பமான தமிழாலயத்தைக் கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக திருமதி நகுலேஸ்வரி சிவநாதன் ( அக்கா ) அவர்கள் நிர்வகித்து வந்துள்ளார். அவரின் நிர்வாகப் பணிக்காலத்தில் கல்வி , கலை, விளையாட்டு போன்ற மூன்று துறைகளிலும் வூப்பெற்றால் தமிழாலயத்தை உயர்த்திச் சிகரமாக்கியதில் இந்த நிர்வாகியின் பங்கு நிறைந்துள்ளது. தமிழ்க் கல்விக் கழகத்தில் பணியாற்றும் 1000 ஆசிரியர்களில் 300 பேர் யேர்மனியில் பிறந்த இளைய ஆசிரியர்கள். அவர்களில் 12 இளைய ஆசிரியர்கள் வூப்பெற்றால் தமிழாலயத்தில் பணியாற்றுகின்றனர். இது அத் தமிழாலயத்தின் கொள்ளை வளர்ச்சியின் உயர்ச்சியாகும்.

23 ஆண்டுகள் தமது நகரத்தில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளின் நலனுக்காக அயராது உழைத்த நிர்வாகி திருமதி நகுலேஸ்வரி சிவநாதன் அவர்களின் பணி நிறைவு விண்ணப்பத்தை ஏற்று, அவரின் நிர்வாகப்பணிக்கான மதிப்பளிப்பை ஊர் கூடிச்சிறப்பாகக் கொண்டாடினார்கள். விழாவின் ஏற்பாட்டாளர்களாக அந் நகரத்தின் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பெற்றோர், ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், நகரிலுள்ள தமிழ் உறவுகளெனப் பல்வகையான 300 க்கும் மேற்பட்ட மக்கள் மண்டபத்தில் ஒன்றுகூடி மிகவும் சிறப்பாக விழாவெடுத்தனர்.

அவரிடம் தமிழ் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் தற்போது வெளிநாடுகளில் வாழ்கின்ற போதிலும் தமது பிஞ்சு விரலைப் பிடித்துத் தமிழ் தந்த இந்தத் தாயின் பணியை மறந்துவிடாது நிகழ்வில் கலந்துகொண்டது எங்களின் பணிக்குக்கிடைக்கின்ற பசளை என்று கூறிய தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செ.லோகானந்தம் ( லோகன் ) அவர்கள் பல வலிகளையும் சுமைகளையும் தன்னலம் கருதாது தாங்கிநின்று தமிழ்ப் பணியாற்றிய அக்கா போன்ற நிர்வாகிகளைச் சிரிப்போடு பணி நிறைவு என்ற புதிய அத்தியாயத்துக்குள் அழைத்துச் செல்ல முடியும் என்பதை எமக்கு வூப்பெற்றால் தமிழ் உறவுகள் யதார்த்தமாகக் காண்பித்துள்ளார்களெனப் பெருமையுடன் கூறினார்.

திரு.பீற்றர் அவர்களும் நகுலா அக்காவும் ஓடி முடித்த அஞ்சல் ஓட்டப் போட்டியின் மூன்றாவது ஓடுநராக நிர்வாகியெனும் புதுப்பணியைச் சுமக்கத் தோள்கொடுத்த திருமதி வே.லோகநாதன் அவர்களை மனமார வாழ்த்திய மக்கள் மனநிறைவோடு மண்டபத்திலிருந்து வெளியேறிய காட்சி மனநிறைவாக அமைந்தது.