கப்பலிலிருந்த கொள்கலனிலிருந்து 64 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

75 0
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு கடத்தப்பட்ட 64 கோடியே 77 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருளை கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து “வைட் ஜூலிட்” (Wide Juliet) என்ற கப்பல் இந்தஹெரோயின் தொகையை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொள்கலனை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்த கொழும்பு இறக்குமதியாளர், உடனடியாக கொள்கலனை மீண்டும் பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடுவதற்கு தயாராகியுள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாக குறித்த கொள்கலனை  கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் அதிலுள்ள விசேட அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

தற்போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளை இறக்குமதி செய்த கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூவர் கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைக்கு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளும் உதவியிருந்த நிலையில், தற்போது இந்த ஹெரோயின் கையிருப்பு மற்றும் சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.