ஹம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, யஹல்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை (21) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் காயமடைந்ததாக நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், யஹல்முல்ல பிரதேசத்தில் நீர்க்குழாய் அமைப்பதற்காக தனது வீட்டுக்கு அருகில் வடிகானை தோண்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு கூடிய கிராம மக்கள் மீதே அப்பகுதியில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட காயமடைந்து மூவரும் வலஸ்முல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் பதிவான நான்காவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.