தமிழர்கள் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டுவதையே தமிழர்கள் எதிர்க்கின்றனர்

127 0

தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையே  தமிழர்கள் எதிர்க்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெற்கில் தமிழர்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை கக்குவதற்கும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் அமைச்சும், அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்களோ என்று சிந்திக்க தோன்றுகின்றது.

மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக, தமிழர்களின் அரசியலுக்கு எதிராக, மரபுரிமை சார்ந்த தமிழர்களின் கொள்கைக்கு எதிராக கருத்துக்கள் வெளிப்படும் நிலையில் தற்போது அரசு சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “பௌத்தர்களின் எழுச்சியை அடக்க முடியாது. பிரபாகரன் போன்று செயல்பட வேண்டாம். தெற்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். வடக்கு தமிழர்களால் பௌத்தர்களுக்கு ஆபத்து வந்துவிட்டது” எனக் கூறி தெற்கின் சிங்கள பௌத்தர்களை உசுப்பேத்தி விடும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். தமிழர்களுக்கு எதிரான அடுத்த வன்முறையை குருந்தூர் மலையிலா? திரியாயிலா? அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுகளில் இருந்தா? ஆரம்பிப்பது என யோசிப்பது போல் தோன்றுகின்றது.

இத்தகைய வன்முறையை தூண்டும் கருத்துக்களை அரசு தரப்பினரோ, எதிரணியில் தமிழர்கள் அல்லாத எவரும் கண்டிக்கவும் இல்லை.சமய அமைப்புகளும் இவ்வாறான கருத்துக்களுக்கு மௌனம் காப்பது இவர்களும் இதனை ஆதரிக்கின்றார்களோ ?என்று கேட்கவும் வைக்கின்றது.

யுத்த காலத்தில் ஆயுதப்படைகள் தமிழர்களின் பூமியை ஆக்கிரமித்தது போன்று ஆயுதம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிங்கள பௌத்த கருத்தியல் கொண்ட வனஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்பு திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன ஆக்கிரமிப்பு வேலைகளை தீவிரப்படுத்தியிருப்பதோடு தமிழர் தாயகத்தில் காணப்படும் தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடங்களை எல்லாம் சிங்கள பௌத்தருக்கு சொந்தமான எனக்கூறி தமிழர் மரபுரிமையை மறுத்து சிங்கள பௌத்தத்தை நிலைநாட்ட முனைவது தமிழர்களையும் கொதிநிலைக்கு தொடர்ந்து தள்ளுகின்ற செயற்பாடாகும்.

அத்தோடு குருந்தூர் மலை “சைவர்களுக்கும், தமிழ் பௌத்தர்களுக்கும் சொந்தமானது” என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து குருந்தூர் விகாரை எனக் கூறி சிங்கள பௌத்தர்களை அணி திரட்ட திட்டமிடுவதோடு, நீதிமன்ற கட்டளையை மீறி இராணுவத்தினரின் துணையோடு விகாரை கட்டுவதையும், தமிழர்கள் அங்கீகரிக்கும் சர்வதேச தொல்லியல் ஆராய்ச்சி நிபுணர்களை சேர்ந்து ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது மட்டுமல்ல, யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைசார் பேராசிரியர்கள், மாணவர்களை சேர்ந்து தொல்லியல் ஆய்வுகளை நடத்த அனுமதிக்காது தமிழர் மரபுரிமையை இருட்டடிப்பு செய்ய நினைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழர்கள் “உண்மையான பௌத்தத்திற்கும், சிங்களவர்களுக்கும், வேறு எந்த மதத்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல” என திரும்பத் திரும்ப கூறினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு ஆகவே உள்ளது. தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதையும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்கள் வைப்பதையும், தமிழர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசங்களில் விகாரைகளையும், தூபிகளையும் கட்டுவதையுமே தமிழர்கள் எதிர்க்கின்றனர்.

மேலும் புராதன கால சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் தமிழ் மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டிய சைவ கோயில்கள் உள்ளன.அங்கு அகழ்வாராய்ச்சி செய்து காணப்படும் தமிழர் மரபுரிமைகளையும், ஏனைய தொல்பொருட்களையும் அழிய விடாது பாதுகாக்காதது ஏன்? அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற இடங்களில் எத்தனையோ மரபுரிமை சார்ந்த இடங்கள் அழிவுகளும் நிலையில் உள்ளன.

அங்கு தொல்பொருள் திணைக்களம் தனது செயற்பாடுகளை மந்த கதியில் நடத்தி கொண்டு தமிழர் நிலங்களையும், மரபுரிமைகளையும் ,குருந்தூர் மலையிலா நீதிமன்ற கட்டளைகளை மீறி புதிய நிர்மாண பணியினை மேற்கொள்வதும் ஏன்? எனும் கேள்விக்கு நேரடியாக பதில் கொடுக்க மறுக்கும் சக்திகள் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி தம்மை மறைத்துக் கொள்ள பார்க்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து, வெளிநாட்டு கையிருப்புகளும் தீர்ந்துள்ள நிலையில், கடந்த காலத்தில் வாங்கிய கடன்களோடு, தொடர்ந்து கடன் பெறும் சூழ்நிலையில் வருமானமின்மை, பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் தெற்கின் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்.

தேர்தல் நடத்தினால் எந்தவொருக்கும் தனித்து ஆட்சி நடத்துவதற்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. எனவே தேர்தலுக்கு முகம் கொடுக்க மீண்டும் இனவாத சக்திகள் தமிழர்களை பலி எடுக்கத் தெற்கின் மக்களை தூண்டுகின்றனரா?

இவர்களோடு சேர்ந்து தமிழர் தாயகத்தின் ஒரு சில சுயநல விரும்பிகளும் தமிழர்களின் தேசியத்தை காட்டிக் கொடுக்கவும் அதற்கு எதிராகவும் செயல்படவும் துணிந்து விட்டது போல் தோன்றுகின்றது. 2009 இனப்படுகொலைக்கும் இத்தகையவர்களே காரணமாக இருந்தார்கள்.

இவரின் கை தற்போது ஓங்கி உள்ளது போல் தெரிகின்றது. இதனை தோற்கடிக்க வேண்டுமானால் தமிழர்களின் தேசியத்தை காக்கும் சக்திகள் வலிமை பெறல் வேண்டும். தமிழர்களின் அரசியல் உரிமைகளையும் மரபுரிமைகளையும் பாதுகாக்க சமூக சக்தியாக ஒன்று திரள்வதோடு பிராந்திய அரசியலுக்கு உட்படாது தனித்துவத்தோடு செயல்படுவதற்கான செயல்பாடுகளை தீவிர படுத்தினால் மட்டுமே நாம் சுதந்திரமாக வாழ முடியும் என்றார்.