வடமராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அம்பன் வெள்ளச் சமவெளி எனப்படும் நீர் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 75 ஆயிரம் திலாப்பியா மீன் குஞ்சுகள் நேற்று புதன்கிழமை (21) விடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடிப் பிரிவின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் திலாப்பியா மீன் குஞ்சுகளை நீர் நிலையில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நேற்றைய தினம் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் நீரில் விடப்பட்டுள்ளன.
அதேவேளை, கடற்றொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேலும் 7 லட்சம் மீன் குஞ்சுகளை அம்பன் நீர் நிலையில் இடுவதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் அம்பன் வெள்ளச் சமவெளி நீர் நிலையை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 200 குடும்பங்கள் இவ்வருடம் நன்மை அடையவுள்ளன.
இந்நிலையில், கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர் வேளாண்மை விருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.