உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் சிக்கல்

115 0

நாட்டில் மாடுகளுக்கு ஒருவகை தொற்று நோய் பரவி வருவது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுகாதார அமைச்சும் எவ்விதமான அறிவிப்பையும் வழங்க தவறியுள்ளதால் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் இது தொடர்பாக சுகாதார அமைச்சும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்த தருணத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் மார்க்க அனுஷ்டானம் இருக்கிறது.

நாடு முழுவதும் மாடுகளுக்கு ஒருவகை தொற்று நோய் பரவியிருக்கிறது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு முறையான எச்சரிக்கை விடுத்துள்ளதா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எவ்வித வழிகாட்டலையும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க தவறியுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்  எம்.எச்.ஏ.ஹலீம் பல தடவை துறைசார் மேற்பார்வை குழுவில் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

எனவே, முஸ்லிம்கள் உழ்ஹிய்யா கடமையை சிரமமின்றி மேற்கொள்ள அது தொடர்பான வழிகாட்டல்களை முன்வைக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், முஸ்லிம் தனியார் சட்டத்தின் திருத்தம் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக தெரிகிறது.

சில அரசியல்வாதிகள் சிலரின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவதனாலேயே இந்த தாமதம் நிகழ்கிறது. அத்தோடு, இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புகளை உணர்ந்து இதயசுத்தியுடன் செயற்படுவது அவசியம் என்பதை இந்த உயர்ந்த சபையில் வலியுறுத்துகிறேன் என்றார்.