சஹ்ரானின் தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் நான்கு வருடங்களின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னாயத்தமாக, ஹம்பாந்தோட்டை – செட்டிகுளம் பகுதியில் மொஹமட் சஹ்ரான் நடத்திய தீவிரவாத விரிவுரை மற்றும் ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 23 வயது இளைஞரை சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கணனி பாடநெறியில் கல்வி கற்கும் கம்பளை – வெலம்படையைச் சேர்ந்த அஜ்மல் சஹீர் அப்துல்லா என்ற 23 வயதுடைய இளைஞரே சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மொஹமட் சஹ்ரான் 2018 ஜூலை 21 மற்றும் 22ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை செட்டிகுளம் பிரதேசத்தில் நடத்திய தீவிரவாத விரிவுரைகள் மற்றும் ஆயுதப்பயிற்சி முகாமில் சந்தேகநபர் கலந்து கொண்டுள்ளமை, தொலைபேசி தரவு அறிக்கைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.