ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த கால மோசடிகள் தொடர்பாகவும் விசாரணைக்குட்படுத்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நோக்கம் தெரியவரும் என எதிர்க்கட்சிகளிள் பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கருத்தொன்றுக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் முன்வைத்திருக்கும் ஊால் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலத்துக்கும் செல்லுபடியாக வேண்டும் என்ற எண்ணமே எமக்கு இருக்கிறது. கடந்த காலங்களுக்கு இந்த சட்டம் செல்லுபடியாகாது என்ற நிலைப்பாட்டை இந்த சட்டமூலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
என்றாலும் இதற்கு இடைக்கால உறுப்புரை ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவிக்கலாம். ஆனால் கடந்த கால மோசடிகளை சட்டத்துக்கு முன் கொண்டுவர இடைக்கால உறுப்புரை போதுமானது அல்ல அதனால் அதற்கு தனிப்பட்ட உறுப்புரை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.
இதற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் பதிலளிக்கையில், கடந்தகால மோசடிகளுக்கும் இந்த சட்டம் செல்லுபடியாகும் வகையில் தனியான உறுப்புரை ஒன்றை ஏற்படுத்த சட்டமா அதிபரின் ஆலாேசனையை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது.
அத்துடன் இந்த சட்டமூலம் திருத்தப்பட வேண்டிய முறை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிரேரணைகளை வழங்கி இருக்கின்றன. அதனால் சட்டமா அதிபரையும் அழைத்து ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து இது தொடர்பாக கலந்துரையாட நாங்கள் தயார் என்றார்.
அதற்கு எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு சமவாயத்தில் நாங்கள் 2004ஆம் ஆண்டு கைச்சாத்திட்டோம். அதனால் இந்த சட்டமூலத்தை 2004வரை செல்லுபடியாக்குவது நல்லது என பிரேரிக்கிறேன்.
அத்துடன் இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்படுகிறதா இல்லையா என்று மாத்திரமே உயர் நீதிமன்றம் பார்க்கிறது. அதனால் இந்த சட்டத்தை கடந்த காலத்துக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்றுவதற்கு அரசாஙகத்துக்கு தேவைப்பாடு இருக்கவேண்டும். அதனால் அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை கடந்த காலத்துக்கு செல்லுபடியாக்காமல் எதிர்காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும் வரை அமுல்படுத்துவதாக இருந்தால் இதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெளிவாகி இருக்கிறது என்றார்.