நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகள்!

175 0

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், நேற்று புதன்கிழமை கூடிய மூன்றாம் நாள் அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு (ஜெனிவா நேரப்படி பி.ப 3.00 மணி) மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது வாய்மொழிமூல அறிக்கையை வாசித்தார். அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையிலும் பதில் உரையாற்றியபோதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தீவிர சமூக, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டமை உள்ளடங்கலாக பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தமிழ் அரசியல் தரப்பினருடன் நடாத்தப்பட்ட சந்திப்பு குறித்தும், அதன்போது காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசியல்கைதிகள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை பற்றியும் பேரவையில் பிரஸ்தாபித்த ஹிமாலி அருணதிலக, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை இலக்காகக்கொண்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர் தென்னாபிரிக்காவுக்குச்சென்று கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாகவும், அதனை ஸ்தாபிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கையாக செயலகமொன்று நிறுவப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் 3000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும், ஏனைய முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத்திட்டத்தில் இழப்பீட்டுக்கான அலுவலகத்துக்கென விசேட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், படையினர் வசமிருந்த 92 சதவீத தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.