நாட்டில் சிறந்த ஊடக ஒழுங்குபடுத்தலை மேற்கொள்வது தவிர ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது.
மாறாக ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுகிறது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பாக நிலையியற் கட்டளை 27 இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (21) சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஊடகங்களை பலப்படுத்துவதற்கும் உண்மையான தகவல்களை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குமே இந்த ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது. அனைவரினதும் கருத்துக்கள் அதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே சட்டமூலமாக்கப்படும்.
ஊடகவியலாளர்களை இலக்காகக் கொண்டு எந்தவித கட்டுப்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
எமது நாட்டின் நான்காவது ஜனநாயக தூணாக ஊடகம் திகழ்கிறது.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு இணங்க எந்த ஒரு ஊடக நிறுவனத்தின் ஒளிபரப்பு அனுமதிப் பத்திரத்தையும் விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரால் ரத்து செய்ய முடியும் . எனினும் புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் அந்த சட்டத்தில் மாற்றம் ஏற்படவுள்ளது.
மேற்படி சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இதுவரை அது சட்டமூலமாக்கப்படவில்லை. அனைவரினதும் ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே அது சட்டமூலமாக தயாரிக்கப்படும். அது தொடர்பில் எதிர்க்கட்சி உட்பட அனைவரும் கருத்துக்களை முன்வைக்க முடியும். அது தொடர்பான ஆவணங்கள் ஊடக நிறுவனங்களின் பரிசீலனைக்காக அந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேவேளை, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே அது தொடர்பான ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரிசீலனைக்காக மூன்று வார காலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.