இலங்கை அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயலென, சிவில் சமூக பேச்சாளர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் கருத்துப்பகிர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
”இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள், முதலாளித்துவ வர்க்க நலன்கள் சார்ந்தவை. ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் நிலைமாறு கால நீதி சார்ந்து தமிழர்களின் கூட்டு இருப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையை முன்வைத்ததா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டியுள்ளது.
தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தை அரசியல் மாற்றமாக கருதுபவர்களுக்கு அது அரசியல் மாற்றமாகவும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு அது மாற்றமற்ற மாற்றமாகவே புலப்படுகின்றது. இவ்வாறானதொரு சூழலில், நிலைமாறுகால நீதி பொறிமுறைகள் முன்னெடுக்கப்படலாமா இல்லையா என்பது விவாதத்திற்குரியது. அதிலும், அப்பொறிமுறை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுவதற்கு பச்சைக்கொடி காட்டியது இரட்டிப்பான தவறு.
ஏனெனில், அச்செயன்முறை இராணுவ மயமாக்கலின் அரசியலுக்கு ஏற்புடைய தன்மையை வழங்குகின்றது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இராணுவ மய நீக்கம் என்பது வடக்கு கிழக்கில் நடைபெறப்போவதில்லை. இராணுவ மய நீக்கம் நடைபெறாவிட்டால் உளவாளிகள் தொல்லையும், வெள்ளைவான் கடத்தல்களும், பாலியல் பலாத்காரங்களும், விசாணைகளும், சித்திரவதைகளும் குறைவதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லாதவொரு எதிர்காலத்தைத்தானா தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்கால சந்ததியினருக்கு அன்பளிப்பாக வழங்கப்போகின்றன?
எனவே, நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சர்வதேச மயப்படுத்தப்படவேண்டும். இழைக்கப்பட்ட குற்றங்களின் காத்திரத்தன்மையை வெளிக்கொணர்வதற்கு, சர்வதேச பங்காளர்கள் மிகவும் அவசியமானவர்கள்.
இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறை சர்வதேச மயப்படுத்தப்படும்போது அதன் பங்காளிகளாக ஐ.நா சபையும், ஏனைய சர்வதேச சுயாதீன ஆர்வலர்களும், நிபுணர்களும் உள்ளடக்கப்படுவர். இதுவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
இலங்கையை பொறுத்தவரையில் பொறுப்புக்கூறல் என்பது அடையாள அரசியல் சார்ந்தது. தமிழ் மக்கள் என்ற அடையாளத்தை கொண்டிருந்ததற்காக மட்டுமே, இறுதி யுத்தத்திலும் அதற்கு முன் நடந்த சம்பவங்களிலும் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
திட்டமிடப்பட்ட குற்றங்கள் பற்றி வலியுறுத்தும்போது, நடந்தேறிய குற்றங்கள் கூட்டு அடையாளம் சார்ந்தது என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.
எனவே நடந்தேறிய விடயங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு, அரசியல் தீர்வு, பிரச்சினைக்கான மூலகாரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளல், தமிழ்த் தேசியம் சார்ந்த வினாக்களுக்கு விடைகள் கண்டுபிடிக்கப்படல் என்பன அவசியமாகும்” என்றார்.