நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

113 0

நுவரெலியாவில் மிகவும் பழமைவாய்ந்த பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா  விடுதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (21) நண்பகல் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டம் பிரதான தபாலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, உடபுஸல்லாவ வீதி வழியாக நுவரெலியா மாவட்ட செயலகம் சென்று, போராட்டகாரர்கள் தங்களது எதிர்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை நுவரெலியா மாவட்ட  மேலதிக செயலாளரான திருமதி போதிமானவிடம் கையளித்தனர்.

“நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக மாற்ற வேண்டாம். ” ” நுவரெலியா பிரதான தபாலகத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்க வேண்டாம்.” “தபாலக கட்டிடத்தில் தபாலக தொழிலை ஒதுக்கி அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டாம்.” “பிரதான தபாலகத்தை எக்காரணம் கொண்டும் சுற்றுலா விடுதியாக மாற்ற இடமளிக்க மாட்டோம்.” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தி ஊர்வலத்தில் சென்றதோடு போராட்டகாரர்கள் கோசங்களையும் எழுப்பினார்கள்.

அதனை தொடர்ந்து, எதிர்ப்பு பேரணி நுவரெலியா புதிய கடை வீதி வழியாக மீண்டும் நுவரெலியா பிரதான தபாலகம் அருகில் சென்று தங்களது எதிர்ப்பு போராட்டத்திற்கான கருத்துகளை தபால் தொழிற்சங்க தலைவர்களும் மத குருமார்களும் போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு தெளிவுபடுத்திய பின் எதிர்ப்பு கூட்டம் கலைந்து சென்றது.

 

போராட்டம் நடைபெற்ற பொழுது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவண்ணம் நுவரெலியா பொலிஸார் பாதுகாப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.