வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை (21) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் வடமாகாணத்தின் ஆளுனராக இருந்தாலும் வவுனியா மாவட்டத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஒன்று இருக்கின்றது. காரணம் நான் வதியும் இடம், பல இடங்களிலே பதவி வகித்திருக்கின்றேன், இறுதியிலே மாவட்ட அரசாங்க அதிபராக கடமை ஆற்றியிருக்கின்றேன்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்நிர்மாணம் என ஆரம்பிக்கப்பட்ட தொடர்பணி ஆரம்பித்தபோது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்தபோது இந்த பாடசாலையின் முதலாவது கட்டிடமும் என்னுடைய முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டது.
அந்தவகையில் இந்த பாடசாலை பல கட்டடங்களை கொண்டு விருத்தியடைந்து மாணவர்களை உள்ளடக்கி சாதனைகளை பொழிந்து நூற்றாண்டு விழாவை கண்டு, பல்வேறு ஆதரவாளர்கள், கொடை வள்ளல்களின் ஆதரவோடு அழகான வாயில் முகத்தையும் சிலைகளையும் கொண்டு, பன்மையும், தொன்மையும் கொண்டு வளர்ந்து இருப்பதை பார்க்கின்றபோது ஒருபுறம் மகிழ்ச்சியும் மனநிறைவுமாக இருக்கின்றது.
கல்வி என்பது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியை அதனுடைய அபிவிருத்தியை, ஆளுமையை , பல் திறன்களை சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம். எங்கு போனாலும் புலம்பெயர்ந்த சமூகம் மூன்று விடயங்களில் ஆர்வமாக இருப்பதை நான் கண்டிருக்கின்றேன். அதாவது தங்களுடைய பல்கலைக்கழக நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றார்கள், பாடசாலை நிகழ்வுகளிற்கு பாடசாலை புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள், தமது கிராமங்களில் உள்ள ஆலயங்களின் புனர்நிர்மாணங்களுக்கு இணைந்து கொள்கின்றார்கள்
வடக்கு கிழக்கிலே புலம்பெயர்ந்த சமூகத்தின் ஆதரவும் அவர்களின் அளப்பெரிய சேவையும் பல இடங்களிலே நடைபெற்று கொண்டிருக்கின்றன. அந்தவகையிலே கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கின்ற ஆதரவென்பது பார்க்கும் போது மிக அளப்பெரியதாக இருக்கின்றது. உற்சாகப்படுத்துவதாக, மாணவர்களை வளப்படுத்துவதாக இருக்கின்றது. அந்த வகையிலேயே மாணவர்கள் இந்த வளங்களை சரியாக பயன்படுத்தி தங்களுடைய கல்வி, விளையாட்டுதுறை, கலைத்துறை பல்வேறு திறன்கள் இதன்மூலம் இவர்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு .
வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194 பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். அதாவது பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகரபுறங்களை நோக்கி செல்கின்றார்கள், இரண்டாவது காரணம் பிறப்பு விகிதம் குறைவு, இதே விடயம் நான் மட்டக்களப்பில் அரசாங்க அதிபராக ஏழு வருடங்கள் இருந்தபோது கிராமபுறங்களிலே பாடசாலைகளை மூடியிருந்தோம்.
அதற்கு பிரதேச செயலாளர்கள் கூறிய காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவடைந்து செல்கின்றது என முதலாம் வகுப்பிலே மாணவர்களை அனுமானிப்பது சில பாடசாலைகளில் பூச்சியம் லெவலுக்கு செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.
எனவே நாங்கள் வாழவைக்க வேண்டுகின்ற இந்த சமூகம் , நாங்கள் வளமாக வாழவேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், இந்த பிரதேசம் எதைநோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன். எனவே தான் நான் உங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்ளும் விடயம் வாழுகின்ற இந்த பிரதேசம், வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களை வாழவைக்க வேண்டிய வழிவகைகளை நீங்கள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
இந்த சமூகத்திலையே சில விடயங்கள் அதிகரித்து காணப்படுவதாக புள்ளி விபரங்கள் எங்களுக்கு கூறுகின்றன. அதாவது விவாகரத்து பெறுபவர்களின் தொகை அதிகரித்து காணப்படுவதாகவும் இரண்டாவது குழந்தை பேறு குறைந்து காணப்படுவதாகவும், வயது சென்ற திருமணங்கள் அதிகரித்திருப்பதாகவும் அதே போன்று இன்னும் சில சமூக பிரச்சினைகள் இருக்கின்றது. குடிபோதை, போதைவஸ்து , தற்கொலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எனவே இவற்றை எல்லாம் கடந்து எமது சமூகம் வாழவேண்டும் என்றால் புலம்பெயர் சமூகம் ஆற்ற வேண்டிய பணி அதிகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
எனவே இந்த சமூகத்தை வாழ வைக்க நீங்கள் செய்யும் சிறிய பணியுடன் நின்றுவிடாது சமூகத்தில் புரையோடிபோய் இருக்கின்ற உள நல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய ஒரு காலம் இப்போது உங்கள் முன்னால் இருக்கின்றது. வெறும் அரசியல், உரிமைசார் பிரச்சினைகள் மட்டும் எமக்கு இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
இளைய சமூகத்தினரிடம் மாணவர்களிடையேயும், குடும்பங்கள், சிறுவர்களிடையேயும் புரையோடி போயிருக்கும் சமூக உள நல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய தேவையும் அவசரமும் எங்களிடம் இருக்கின்றது. எனவே அதை இன்று கூடியிருக்கும் புலம்பெயர் சமூகமும் , இணைந்திருக்கும் உள்ளூர் சமூகமும் உணர்ந்து செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.