ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு, மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. இதையடுத்து, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜூன் மாதத்தில் திடீரென கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக, பழுதடைந்துள்ள மின்சாதனங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மின்மாற்றி பழுது: கனமழையால் பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி பழுதடைந்து, அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது. எனவே உடனடியாக வேறொரு மின்மாற்றி பொருத்தப்பட்டது. அதுவும் பழுதடைந்ததால், இன்னொரு மின்மாற்றி பொருத்தி சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலைக்குள் பணிகள் முடிந்து, மின் விநியோகம் செய்யப்படும்.
கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 துணை மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. 49 மின் பாதைகள், 27பில்லர் பாக்ஸ்கள், 51 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வாரிய ஊழியர்கள் கடும் மழையிலும் தொடர்ந்து பணியாற்றி, இப்பிரச்சினைகளை 2 மணி நேரத்துக்குள் சரி செய்துள்ளனர்.
பாதிப்பை தடுக்க குழு: பல இடங்களில் மின்னழுத்த பளு காரணமாக புதைவடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தரமான புதைவடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு, மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும்.
பருவமழையின் போது மின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து தடுக்க குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.