ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவிநீக்கக் கோரி மதிமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ள படிவத்தில் முதல் கையெழுத்திட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: ஆளுநர் பொறுப்பை வைத்துக்கொண்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக தன்னிச்சையாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அனைத்து வகையிலும் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையை எடுப்பதோடு, தனி ஆதிக்கத்தை வைத்து மாநில அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகிறார். அவரை பதவியில் இருந்து நீக்குமாறு கையெழுத்து இயக்கத்தை வைகோ தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முதல் கையெழுத்திடுவதில் பெருமையடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது கையெழுத்திட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ‘‘தமிழகத்தின் நலனுக்கும் அரசியல் சட்டத்துக்கும் முதல் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி. நாகலாந்து மக்களைப் போல தமிழக மக்களும் கிளர்ந்து எழ வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். மாநில நலனுக்காக மக்கள் கையெழுத்திட வேண்டும்’’ என்றார்.