முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக பாஜக பெண் ஆதரவாளரை, சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்க்கி(56). பாஜக ஆதரவாளர். இவர், முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஹரீஷ், கோவை சைபர் கிரைம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
அதன் பேரில், காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து உமா கார்க்கியை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினர், மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். உமா கார்க்கியை கைது செய்ய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.