அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கே பாதிப்பு- சஜித்

112 0

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் தீர்மானிக்காத காரணத்தினால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு முகம் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகளுக்கு இன்னமும் சாதாரண விலையில் உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

ஒரு கிலோ நெல்லின் விலை 80 ரூபாய்க்கும் 90 ரூபாய்க்கும் தான் வாங்கப்படுகிறது. குறைந்தது 120 ரூபாய்க்கேனும் இது விவசாயிகளிடமிருந்து விற்கப்பட வேண்டும்.

அரிசி கிலோ ஒன்று 200 ரூபாய்க்கும் 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது. அப்படியானால் இதில் அதிக லாபத்தை யார் சம்பாதிப்பது?

இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, அரசாங்கம் ஏன் நெல்லுக்கான நிர்ணய விலையை தீர்மானிக்கக்கூடாது?

ஜனாதிபதி கடந்த காலங்களில் விவசாயிகளை சந்தித்து, 120 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

மேலும், நெல்லுக்கான நிர்ணய விலையாக 100 ரூபாயை ஆக்கியதாகவும், 100 ரூபாயை பின்னர் 120 ரூபாயாக மாற்றியதாகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் கூறப்படுகிறது.

ஆனால், இது நடைமுறைக்கு வந்துள்ளதா என கேட்க விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.