ரணில் மொட்டின் சதிவலைக்குள் சிக்குண்டுள்ளார் – தலதா

92 0

நாடாளுமன்றத்தில் நாளை கொண்டுவரப்படவுள்ள இலஞ்ச – ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் இலஞ்சத்திற்கு எதிரான சரத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகொரல வலியுறுத்தினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த சட்டமூலங்களுக்கு நாம் என்றும் ஆதரவை வழங்குவோம்.

நாளைய தினம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள இலஞ்ச- ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து நாம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறோம்.

இந்த சட்டமூலத்தை மேலும் பலப்படுத்த எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்ப்புக்களையும் வழங்குவோம்.

இந்த சட்ட மூலத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் இலஞ்சத்திற்கு எதிரான சரத்துக்கள் சேர்க்கப்படவில்லை. ஒரு பெண் என்ற ரீதியில் இந்த சரத்தையும் சேர்க்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

நாட்டின் நன்மைக்காக நாம் அரசாங்கத்தின் சிறந்த செய்றபாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம். இதில் பிரச்சினையில்லை.

எமக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக எந்தவொரு முரண்பாடும் கிடையாது. ஆனால், அவரை சூழ உள்ள குழுவினர் குறித்துதான் எமக்கு பிரச்சினை உள்ளது.

அவர் ஒரு கழிவுக் குழியில்தான் தற்போது சிக்குண்டுள்ளார். இதுதான் எமக்குள்ள பிரச்சினையே” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.