இலங்கையில் 7 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கின்றது. அதாவது 2019 ஆம் ஆண்டு வரையில் மூன்று மில்லியன் மக்களே வறுமையின் கீழ் இருந்ததாகவும் எனினும் கடந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 மில்லியன்களாக உயர்வடைந்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமை நிலை 2023 ஆம் ஆண்டாகும் போது 31 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது.இலங்கையின் சனத்தொகையில் 7 மில்லியன் மக்கள் அதாவது 70 இலட்சம் பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையில் தீவிரமடைந்த டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த வறுமை நிலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
சர்வதேச அறிக்கைகள்
இலங்கையின் வறுமை நிலை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், யுனிசெப் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இலங்கையின் வறுமை நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. முக்கியமாக மக்கள் தமது உணவு தேவைகளை குறைத்துக்கொண்டிருப்பதாகவும் பலர் பசியுடன் நித்திரைக்கு செல்வதாகவும் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதேவேளை இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான சர்வதேச அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உணவு பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில், சனத்தொகையில் 17 சதவீதமானவர்கள் அதாவது 39 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த வருடத்தின் ஜூன்/ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும் போது, அந்த நிலைமை 40 வீதம் குறைவடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்திருக்கின்றது.
லேர்ன் ஏசியாவின் ஆய்வு
எப்படியிருப்பினும் லேர்ன்ஏசியா அமைப்பு வறுமை தொடர்பாக முன்னெடுத்த ஆய்வு அறிக்கையிலுள்ள விடயங்களையும் ஆராயவேண்டியது அவசியமாகின்றது.
இந்த ஆய்வின்படி 31 சதவீதமான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களில் 51 சதவீதமானோர் பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களாக இருக்கின்றனர். கிராமப் பகுதிகளில் 32 சதவீதமானோரும் நகர் பகுதிகளில் 18 சதவீதமானோரும் வறுமை கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 70 இலட்சம் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களில் அரைவாசிப் பேர் அதாவது 51 சதவீதமானோர் பெருந்தோட்ட பகுதிகளில் இருப்பதாக ஆய்வு கூறுகின்றது.
மேலும் தற்போது காணப்படும் சமூகநல பாதுகாப்பு திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைவதில் பலவீனமான நிலைமை காணப்படுவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எனினும் சமுர்த்தி போன்ற உதவிகளை பெறுகின்றவர்களில் நான்கு வீதமானோர் வசதி படைத்த குடும்பங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க இது தொடர்பில் அனுபவத்தை பகிர்ந்துள்ள இந்த ஆய்வு செயற்பாட்டில் பங்கெடுத்த லேர்ன்ஏசியா நிறுவனத்தின் கயனி ஹுருல்லே, இந்தளவு குறுகிய காலத்துக்குள் மேலும் 4 மில்லியன் மக்கள் வறுமை நிலைமைக்குள்ளாகியுள்ளமை கவலையளிக்கிறது. ஆரோக்கியமான, சரியான அளவில் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமலுள்ளதாக நாம் சந்தித்த பெற்றோர்கள் தெரிவித்தனர் என்று குறிப்பிடுகிறார்.
சொத்துக்களை விற்கும் மக்கள்
கடந்தகாலங்களில் வறுமை நிலைமை காரணமாக மக்கள் பல்வேறு ரீதியான தீர்மானங்களை எடுத்திருக்கின்றனர். 70 மில்லியன் மக்கள் வறுமையின் கீழ் வாழ்கின்ற நிலையில் 47 சதவீதமானோர் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கின்றனர். அதேபோன்று 33 சதவீதமானோர் குறைவான உணவை உட்கொள்கின்றனர். 27 சதவீதமானவர்கள் (சிறுவர்கள்) பெரியோர்களின் உணவைப் பயன்படுத்துகின்றனர்.
நுவரெலியாவை சேர்ந்த 37 வயதான பெண் கருத்து வெளியிடுகையில்,
எனது கணவர் ஒரு சாதாரண தொழிலாளி. அண்மையில் ஒருநாள் எனது கணவர் வேலைதேடி அலைந்து மாலையில் குறைந்தளவு பணத்துடன் வீட்டுக்கு வந்தார். அதில் குழந்தைகளுக்கு சிறிது உணவை தயாரித்தேன். நான் பசியுடன் இருந்தேன். இவ்வாறு எத்தனையோ நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளேன். எனினும் நான் சாப்பிடவில்லை என்பதை எனது குடும்பத்தாருக்கு வெளிப்படுத்தமாட்டேன் என்று மிகவும் சோகமான தனது கதையை கூறியிருந்தார்.
இதேவேளை கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொத்துக்களை விற்பனை செய்தே அன்றாட உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொண்டனர். ஆய்வின் பிரகாரம் 37 சதவீதமானவர்கள் தமது சொத்துக்களை விற்பனை செய்திருக்கின்றனர். அதேபோன்று 50 சதவீதமானோர் சேமிப்பை உணவு தேவைக்காக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை 2023ஆம் ஆண்டு பாரியளவில் மோசமான வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 2019 ஆம் ஆண்டு 28 சதவீதமான வறுமை நிலை காணப்பட்டது. தற்போது 33 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. வட மத்திய மாகாணத்தில் 18 சதவீதமாக இருந்த வறுமை நிலை தற்போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு சகல மாவட்டங்களிலும் வறுமை அதிகரித்துள்ளது.
நெருக்கடியின் ஆரம்பம்
2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது. டொலர் நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலையேற்பட்டது. எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. மிகவும் குறைந்த அளவிலான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களே கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கு மக்கள் நாட்கணக்கில் கிலோமீற்றர் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய யுகம் ஏற்பட்டது. உணவுப் பொருட்களின் விலைகள் தீவிரமாக அதிகரித்தன. வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்தது. பணவீக்கம் 80 சதவீதத்தை தாண்டியது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். சம்பளங்கள் குறைக்கப்பட்டன. மக்களினால் பெறுகின்ற சம்பளம் மற்றும் அன்றாட வருமானத்தைக் கொண்டு குடும்பங்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மக்கள் தமது தேவைகளை குறைத்துக்கொண்டனர். இரண்டு வேளை உணவு உண்ணும் நிலைமை ஏற்பட்டது. யுனிசெப் அமைப்பின் 2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம் பல குழந்தைகள் இரவு நேரத்தில் பசியுடன் நித்திரைக்கு செல்வதாகவே அறிக்கையிடப்பட்டது.
மாணவர்களின் கல்வி பாதிப்பு
இந்தவகையிலேயே தற்போதைய ஆய்வின் பிரகாரம் வறுமை நிலை அதிகரித்துள்ளது. மேலும் வறுமை நிலையானது மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது. நாட்டில் ஆறு சதவீதமான மக்கள் ஐந்து முதல் 18 வயது வரையான தமது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை என்று இந்த ஆய்வு கூறுகின்றது. முக்கியமாக இலங்கையில் குறைந்தபட்சம் 2 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு நெருக்கடி காலப்பகுதியில் செல்லவில்லை என்பதை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. சமூக பிரதிநிதி ஒருவர் இது குறித்து குறிப்பிடுகையில், இங்கிருக்கின்ற ஒரு தோட்டத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. அவர்கள் பல தொழில்களை தேடித் திரிகின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை உழைக்கின்றனர் என்கிறார்.
நிவாரண திட்டங்கள்
இதேவேளை வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இந்த ஏழு மில்லியன் மக்களில் 2 மில்லியன் குடும்பங்கள் இருக்கின்றன. எனினும் தற்போது காணப்படுகின்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் வறுமை நிலையிலுள்ளவர்களை சென்றடைவதில்லை என்ற விடயமும் ஆய்வில் முன்வைக்கப்படுகின்றது. அரசாங்கம் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தை கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் அறிவித்ததுடன் நிவாரணம் பெறுவதற்கான தகுதியான மக்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது. அதனடிப்படையில் 39 இலட்சம் மக்கள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். அதில் தற்போது 20இலட்சம் பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையில் கிட்டத்தட்ட 25 வகையான சமூக உதவி பாதுகாப்பு திட்டங்கள் காணப்படுகின்றன. அதில் முக்கியமாக சமுர்த்தி உதவி திட்டம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவு திட்டம், விசேட தேவையுடையோருக்கான உதவி திட்டம், சிறுநீரக நோயாளர்களுக்கான உதவி திட்டம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
மேலும் இலங்கை கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னரான காலப்பகுதியில் மொத்த தேசிய உற்பத்தியில் 0.4 சதவீதமான நிதியையே சமூக நிவாரணங்களுக்காக செலவழித்திருக்கிறது. அதாவது 2019 ஆம் ஆண்டு இலங்கையின் வறுமை சதவீதம் 14 ஆக இருந்தபோது நிவாரணத்துக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 0.4 சதவீதமான நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 6.8 சதவீதமான வறுமையைக் கொண்ட வியட்நாமில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.6 சதவீதமான நிதி வறுமையை போக்க பயன்படுத்தப்படுகின்றது. அதாவது வறுமையை போக்குவதற்கான வேலைத்திட்டங்களின் பங்களிப்பு இலங்கையில் போதுமானதாக இல்லை என்பதே ஆய்வில் புலப்படுகின்றது.
20 இலட்சம் பேருக்கு நிவாரணம்
அரசாங்கத்தின் அஸ்வெசும திட்டத்தின்படி நான்கு இலட்சம் பேர் 2500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை பெற தகுதிபெற்றுள்ளனர். மேலும் மிகவும் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சம் பேர் 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவை பெற தகுதிபெற்றுள்ளனர். வறுமையின் கீழ் வாழுகின்ற எட்டு இலட்சம் பேர் 8,500 ரூபா கொடுப்பனவை பெறவுள்ளனர். மிகவும் கடுமையான வறுமை நிலையில் இருக்கின்ற நான்கு இலட்சம் பேர் 15,000 ருபா கொடுப்பனவை மாதாந்தம் பெறவுள்ளனர். இவை ஒவ்வொரு காலகட்டம் வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக 15,000 ரூபா கொடுப்பனவை பெறுகின்றவர்கள் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த கொடுப்பனவை மாதாந்தம் பெறுவார்கள்.
மொத்தமாக 20 இலட்சம் பேர் நிவாரண உதவிகளை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 72,000 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு கிடைக்கின்றது. சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவான 5000 ரூபா 39 ஆயிரத்து 150 பேருக்கு கிடைக்கின்றது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான 2000 ரூபா கொடுப்பனவு 4 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கிடைக்கின்றது.
இதேவேளை சரியான விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக சிலர் இந்த அஸ்வெசும நிவாரணத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் அனுசரணையுள்ள திட்டம் என்றால் அது எமக்கு கிடைக்காது என்பது நன்றாகவே தெரியும். அதனால் அது தொடர்பாக நான் கவலை அடையவில்லை என்று குறிப்பிடுகிறார்.
என்ன செய்ய வேண்டும்?
மேலும் லேர்ன்ஏசியா நிறுவனத்தின் ஆய்வின் பிரகாரம் பல பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது உடனடியாக இந்த அஸ்வெசும திட்டத்தை மீளாய்வு செய்து மீண்டும் மக்களுக்கு அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் வறுமை கோட்டுக்கு இடையில் இருக்கின்ற மக்களுக்கான தொடர்பாடல்கள் சரியான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக இலங்கையில் 13 மாவட்டங்களில் 400 கிராம சேவகர் பிரிவுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக 10,000க்கும் மேற்பட்ட மாதிரி குடும்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
2019 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வறுமை இன்று 31 சதவீதமாக அதிகரித்திருக்கின்றது. ஆனால் இன்னும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வறுமையை நிலையை அறிவிக்கவில்லை. எனினும் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி வறுமை உயர மிக முக்கிய காரணமாகும். அதாவது எரிபொருள் விலை உயர்ந்தமை, எரிபொருளுக்கான தட்டுப்பாடு காரணமாக உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகரித்தமை, தொழில்கள் இழக்கப்பட்டமை, மக்களின் சம்பளங்கள் குறைந்தமை, தொழில்துறை பலமிழந்தமை தொழிற்சாலைகள் செயலிழந்தமை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் கைவிடப்பட்டமை, பணவீக்கம் அதிகரித்தமை, வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தமை போன்றன இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. தற்போது இந்த வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். முக்கியமாக பெருந்தோட்ட பகுதிகளில் வறுமையை தாண்டவமாடுவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. எனவே இது தொடர்பாக சரியான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
பெருந்தோட்ட மக்களின் நிலை குறித்து கவனம் அவசியம்
பெருந்தோட்டப் பகுதிகளில் சகலருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் உலக வங்கி மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். மேலும் தற்போது நிவாரண உதவிகள் அவசியமாகின்றன. ஆனால் நீண்டகாலத்தில் வறுமையை போக்குவதற்கான பொருளாதார அபிவிருத்தி வலுவூட்டல் திட்டங்கள் அவசியம். இந்த ஆய்வு அறிக்கைகளை தீர்மானம் எடுக்கின்ற நிலையில் இருக்கின்றவர்கள் ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியமாகவே உள்ளது.
ரொபட் அன்டனி