புலிகளின் துப்பாக்கிகளைத் தொட்டுப் பார்க்கும் சிங்களவர்கள்!

632 0

jera27புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்லும் தெருவொன்றிருந்தது. 2002ஆம் ஆண்டுக்கு முன் அது செவ்வீதி. அதற்குப் பிறகு அது தார் வர்ணக்கலருக்கு மாற்றப்பட்டது. அந்த வீதியின் இடையில் மந்துவில் என்ற ஒரு கடல் கலப்புக் கிராமம் இருந்தது. அந்தக் கிராமமும் வன்னியின் ஏனைய கிராமங்களைப் போல படுகொலையொன்றினூடாகவே தனக்கான விளம்பரத்தைத் தேடிக்கொண்டது. 1999ஆம் ஆண்டில் மந்துவில் சந்தை மீது நடத்தப்பட்ட கிபீர் தாக்குதலில் 50 சனங்கள் பிணமாகினர். அப்போது வட இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து போரின் பெயர்வாளர்களாய் வந்த சனங்களுக்கு மந்துவிலும் மடமளித்தது. அதனால் தான் இப்படியான சாவுகளும் அதிகரித்தன.

அதோடு மந்துவில் பிரபல்யமடைந்தது. சமாதான காலத்தில் பெரிய வீடுகள் முளைத்தன. வீதிகள் அகலமாயின. வீதியோடு ஒட்டிநின்ற பாலை மரங்கள் எல்லாம் விரைவாகப் படுகொலை செய்யப்பட்டன. தார்வர்ணம் விரைவாகப் பூசப்பட்டது. நந்திக்கடல் மீனுக்குப் பிரபலமான மந்துவில் சந்தை விரைவாகக் காணமல் போனது.

அந்த ஊரை தெரிந்த அனைவருக்கும் கீழ்வரும் விடயங்கள் ஞாபகமிருக்கும். மந்துவில் கடக்கையில் வரும் சிறு குளம். வாகன சாரதிகளுக்கு கட்டாயம் நினைவிருக்கும். ஏனெனில் அந்தக்குளத்தில் தம் வாகனங்களை குளிப்பாட்டதவர்கள் கொடுத்துவைக்கா தவர்கள். வாகனம் கழுவுவதற்கு அந்தச் சிறு குளம் அவ்வளவு பிரபல்யம். அதற்கருகில் இடம் மாறிக் கொண்டேயிருக்கும் ஒரு பிள்ளையார் கோயில், தனிப் பனை, போராளிகளுக்கான நூலகம், கடற்புலிகளின் வாகன தரிப்பிடத் தென்னங்காணி, சில வெட்டைக்காணிகள், அதில் புதிதாக நடப்பட்ட இளந் தென்னம் பிள்ளைகள் இவை மட்டும் தான் மந்துவில் பற்றிய பொதுவான ஞாபகங்கள். அப்போது யாரும் நினைக்கவில்லை மந்துவில் நம்மை இவ்வளவு மோசமாகன நினைவுகளால் கொல்லுமென்று.

நம் கடந்த காலத்தை அதிகமாக நேசித்த ஒவ்வொருவரையும் கிழித்துக் குதறி கொடுமைப்படுத்தும் நினைவொன்றை மந்துவில் இப்போது வைத்திருக்கின்றது. அது தமிழரின் ஆயுதங்கள் அநாதைகளாகியமைக்கான அடையாளங்களை காட்சிப்படுத்தியிருக்கின்றது.

குளத்தின் நடுவில் பிரமாண்டமான வெற்றியின் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அந்த வெற்றிச் சிலையை சிங்கங்கள் காவல்காக்கின்றன. குளத்தின் அருகில் பரந்த வெளி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தென்னை மரங்களையும் வீடுகளையும் காணவில்லை. அவை இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னரே அழிந்துவிட்டன என்பதற்கான சான்றுகளே காணப்படுகின்றன. அந்த வெளி முழுவதும் ஆயுதக் கூடுகள் – எல்லாம் கழற்றி சுத்தம் செய்யப்பட்டவை – பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியப்பை ஏற்படுத்தக் கூடியளவில் காட்சிப்படுத்தப்பட்டவை.

எத்தனை வகை ஆயுதங்கள். சாதாரண பார்வைகளுக்கு இதுவரை உட்பட்டிருக்காத ஆயுத ரகசியங்கள். அங்கு காட்சிப்படுத்தப்பட்டவைகளில் பெரும்பாலானவை ஆயுத சந்தைகளில் விற்பனையாகாதவை. எந்த அமெரிக்க ஆங்கிலப் படங்களிலும் காட்டப்படாதவைகள். படங்களில் வரும் பல்வேறு ஆயுதங்களின் கலப்பினாலும் பிரசவமானவையாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு எப்படி தோற்றனர்? என்ற கேள்வியைத் தான் பார்வையிடும் ஒவ்வொரு தமிழரும் முணுமுணுக்கின்றனர். வரிசையாய்க் கிடக்கும் ஒவ்வொரு ஆயுதங்களையும் கடந்து போகயில் அவமான முள் இதயத்தைத் துளைக்கிறது.

இந்தப் பலம்மிக்க ஆயுதக் காரரை தமது படையினர் வென்ற பெருமையை சிங்கள சுற்றுலாவிகள் சத்தமாய்ப் பேசிக் கொள்கின்றனர். எலும்புக் கூடுகளாய் கிடக்கும் ஆயுதங்களின் காவலாளிகளை கதாநாயகர்களாகப் பார்க்கின்றனர். அந்தச் சுற்றுலாவிகளுக்கு அது ஆச்சரியம். தழிழர்க்கு அது அவமானச் சின்னமாய்க் கிடக்கின்றது.

manthuvil

பெரும்பாலான பொதுச் சனங்களுக்கு அறிமுகப்பட்டிருந்த பரந்தாமன், வெண்ணிலா, வளர்மதி, போன்ற கடற்புலிப் படகுகள் தரையில் நிற்கின்றன. இந்தப் படகுகளின் அறிமுகத்தை முல்லைத்தீவு மக்கள் அதிகம் அறிவர். 2004 ஆம் ஆண்டில் ஒரு நாள் கடற்புலிகளின் கடற் சாகசம் முல்லைத்தீவுக் கடலில் நடந்து கொண்டிருந்தது. வெண்ணிலா படகில் நின்றிருந்த போராளி படகின் வேகத்தால் உந்தப்பட்டு கடலில் விழுந்தான். அவனை கரையில் தயாராக இருந்த சனங்கள் தான் காப்பாற்றினர். அந்த விறுவிறுப்பு ஆறும் முன்பே அடுத்த விறுவிறுப்பொன்று நடந்தேறியது. நடுக்கடலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிதப்பத்தில் தீபமேற்றப் பயணித்த சூசை திடீரென ஏற்பட்ட சறுக்கலில் தவறி கடலில் விழுந்தார். அந்தக் கணத்தில் முல்லைத்தீவு மக்கள் தான் அவரைக் காப்பாற்றினர். கரையில் நின்ற சனங்கள், புலிகளின் பெரிய படகுகளும் ஏனைய போராளிகளும் வரும் முன்னர் கடலில் குதித்து அவரைத் தம் தோளிகளில் சுமந்து வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சடுதியாகக் கரைக்குத் திரும்பியது முதலாவதாகப் பரந்தாமனும் இரண்டாவதாக வெண்ணிலாவும் தான். இதனாலேயே அந்தச் சாகசத்தைப் பார்த்தவர்கள் காட்சிப் பொருளாய்ச் செத்துக் கிடக்கும் இந்தப் படகுகளை நினைவு வைத்திருக்கின்றனர்.

இயக்கம் ஆயுதங்கள் தயாரிப்பது பற்றி சனங்களுக்கு சாடைமாடையாய்த் தெரியும். காதுகளுக்குள் மட்டும் இருக்கிற ரகசியங்களில் கட்டாயமானதொன்றாக அது இருந்தது. அப்படியிருந்த செய்திகளில் ஒன்றுதான் தலைவரின் மகன் “சமாதானம்” என்ற ஒரு பெரிய ஆயுதத்தை கண்டுபிடிச்சிருக்கிறாராம் என்பது. “அது பெரிய சத்தமாக வெடிக்குமாம். அந்தத் தயாரிப்பில் ஈடுபட்ட பலருக்கு காது கேட்காமல் போய்விட்டதாம்.பெரிய தண்டவாளத்தில தானாம் அது செய்திருக்கினம். இனி வரப் போற சண்டையில் அதைத் தான் பாவிக்கப் போகினமாம்” என்பது போன்ற பல கதைகளை சனங்கள் அறிந்திருந்தனர். ஆனால் யாரும் அதை நேரில் கண்டதில்லை. ஊரெல்லாம் அறிந்திருந்த ஆயுத விடுப்புச் செய்திகளில் வந்த அடையாளங்களோடு மந்துவிலிலும் பிரமாண்டமானதொரு பீரங்கி நிர்வாணமாய் நிற்கின்றது. தண்டவாளத்தால் செய்யப்பட்டிருக்கின்றது. ஒரு மனித உயரத்தில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் பக்கத்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. “சமாதானம்” அதுவாகத்தான் இருக்கக் கூடும்…!

ஊர்காவற்றுறைக் கடற்பரப்பில் மர்மமான முறையில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதில் கடற்படையினர பலர் கொல்ல்ப்பட்டும் காயமடைந்தும் இருந்தனர். அந்தக் கடற்கலம் மிக மோசமாக சிதைந்து கடலில் மூழ்கியதாகப் பத்திரிகைள் எழுதியிருந்தன. அதில் நீரடியில் பயணிக்க கூடிய சைக்கிள் போன்றதொரு தற்கொலைப் படகே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பலரும் வாரப்பத்திரிகைகளில் எழுதினர். அவர்கள் கூறிய சாயலில் சில நீரடி உந்துருளிகள் மந்துவில் வெட்டையில் அடுக்கப்பட்டிருக்கின்றன.

கடைசி நேரத்தில் தப்பித்துப் போவதற்காக தயாரிக்கபட்ட நீர்மூழ்கிகள் என ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட மூடிய படகுகள் பலவும் நிலத்துக்கு மேல் கறலேறிக் கிடக்கின்றன.

IMG_0065-1024x682
சாமாதான காலத்தில், ஈழநாதம் பத்திரிகையில் எதிர்பாராத வெடிவிபத்தின் போது சாவடைந்ததோர் பற்றிய பெயர் விபரம் ஒவ்வொரு நாளும் வரும். அதெப்படி ஒவ்வொரு நாளும் எதிர்பாராத வெடிவிபத்து நடக்கும் என்ற சந்தேகம் பல பேருக்கிருந்தது. காலையில் பத்திரிகையை பார்த்தவுடனேயே இந்த சந்தேகத்தைப் பலர் கிளப்புவர். ஆயுதங்கள் தயாரிக்கும் போது ஏற்படும் கவனயீனத் தவறுகளால் நிகழும் மரணங்களைத் தான் அப்படி அடையாளப்படுத்துகிறார்கள் என பின்வந்த காலங்களில் தெரியவந்தது. கிபீர் மற்றும் இராணுவத்தினர் அடித்து வெடிக்காமல் இருக்கும் குண்டுகளைக் கழற்றி அதன் பாகங்களைக் கொண்டு புதிதாய் இன்னொன்றைக் கண்டுபிடிக்கும் போதே இத்தகைய சம்பவங்கள் நிகழ்கிறது எனவும் தெரியவந்தது. இதில் எதிர்பாராமல் நிகழும் கதிர் வீச்சுக்களால் பலருக்கு கண் தெரியாமல், காது கேளாமல், கை, கால் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்பதும் விடுப்புச் செய்திகளில் விருப்பம் கொண்ட அனைவருக்கும் தெரியும். இப்படிப் பலரின் உயிர்களை உறுப்புக்களைத் தானமளித்து தயாரிக்கப்பட்ட விதம் விதமான குண்டுகள் மந்துவிலின் போர் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளங்கை அளவிலிருந்து ஒரு மனித உருவம் அளவு வரையிலான குண்டுகள் தமிழ் மக்களின் பிள்ளைகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டவைகள் சனங்களின் கதைகளில் இடம்பிடித்திருந்து சில ஆயுதங்கள் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே. இதனைப் போல அங்கு கிடத்தப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு ஆயுதத்திற்கும் தமிழ் சனத்தோடு தொடர்புடைய கதைகளும் நினைவுகளும் உண்டு. அவ்விதமான அனைத்து ஆயுதங்களும் அந்த வெளியில் பரப்பட்டிருக்கின்றன. அவைகள் இப்போது அழகான காட்சிப் பொருட்கள். அதை சுற்றுலாவிகள் தொட்டுப் பார்க்கின்றனர் தூக்கிப் பார்க்கின்றனர். வியப்பும், பயங்கரமும் நிரம்பிய ஞாபகக் கதைகளை ஆயுதங்களிலிருந்து எடுத்துப் போகின்றனர்.