தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகள், தெருக்களில் மழைநீர் தேக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரவலாக டெங்கு காய்ச்சல் கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகளைகையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர். போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.