உலக மக்களே! அரசுகளே!! தமிழர்களுக்கான நீதியை பெற உதவுங்கள்.

138 0

அறிக்கை
19.06.2023

போர்க்காலத்தில் மட்டுமல்ல அமைதிக்காலம் எனத் தாம் கூறும் 2009 க்குப் பின்னரும்
இனவழிப்பை அரசியலாக்கும் ரணில் விக்கிரமசிங்கா அனைத்துலகக்குற்ற விசாரணைக்குரியவர்.
உலக மக்களே! அரசுகளே!! இனவழிப்பைச் செய்யும் தனிநபருக்கான
அனைத்துலகச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழர்களுக்கான நீதியை பெற உதவுங்கள்.

சிறிலங்காவின் இன்றைய அரச தலைவராக ஈழத்தமிழினவழிப்பை 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடாத்திய ராசபக்ச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் ரணில் விக்கிரமசிங்கா ஈழத்தமிழினவழிப்பை 1978ம் ஆண்டு முதல் இன்று வரை 45 ஆண்டுகளாகத் தனது அரசியற் கொள்கையாகவும் கோட்பாடாகவும் முன்னெடுத்து அரச பயங்கரவாதத்தால் ஈழத்தமிழர்களுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை நாளாந்த வாழ்வுக்கு அளித்துவரும் ஒரு சிங்கள பௌத்த பேரினவாத அரசியல்வாதியாவார்.

முக்கியமாக இவரை, இவரது நெருங்கிய உறவினரான முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா 1979 இல் அரசியல் விழிப்புணர்ச்சியுள்ள ஈழத்தமிழர்களைக் காரணமின்றிக் கைது செய்யவும் விசாரணையின்றி அடைத்து வைக்கவும் அனுமதித்து படையினர் தாம் விரும்பியவாறு கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் எரிக்கவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் படையினர்க்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கிய பொழுது ஜே ஆர் ஜயவர்த்தனாவின் இந்த ஈழத்தமிழின அழிப்பை முன்னெடுக்கும் அவரின் வாரிசாக ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்கா. அன்று முதல் இன்று வரை ஜே. ஆர். ஜயவர்த்தனா அவர்களின் ‘”போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற ஈழத்தமிழர்கள் மேலான யுத்தத்திற்கு முழுஅளவில் சிங்களப்படையினரைப் பல்வேறு நிலைகளில் ஊக்குவித்து வருபர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்கா.

படைபலத்தால், அரசபயங்கரவாதத்தால் இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையைக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயக இருப்பை ஏற்காது அவர்களின் இறைமையை ஒழித்தல், இலங்கைத் தீவில் அவர்கள் “தேசிய இனம்” என்பதை ஏற்காது தேசிய நீக்கம் செய்தல், ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத மனித உரிமையான, அவர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிப்பதைப் படைபலத்தின் மூலமான இனங்காணக் கூடிய அச்சமூட்டலால் தடுத்து அவர்களின் அரசியற்பணிவைச் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு ஆட்சிக்குப் பெறுதல் என்னும் மூன்று அரசியல் கொள்கைளின் அடிப்படையில் தனது அரசியற் கொள்கைகளை வகுக்கும் நோக்குடையவராக இவர் கடந்த 45 ஆண்டுகளாக விளங்குகின்றார்.

அதேவேளை ஈழத்தமிழினவழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனவழிப்பு என்னும் மூவகைப்பட்ட அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயல்களை ஈழத்தமிழர்கள் மேல் தனது ஆட்சிக்காலங்களில் நடைமுறைப்படுத்தி அவர்களை இலங்கைத்தீவில் இரண்டாந்தரக் குடிகளாக அடிமைப்படுத்துதல் என்பதைத் தனது அரசியற் போக்காக 45 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்பவர்தான் இந்த ரணில் விக்கிரமசிங்கா.

இவரது முதலாளித்துவ சார்பு நிலைகாரணமாக உலகின் வல்லாண்மைகளையும் பிராந்திய மேலாண்மைகளையும் இலங்கைத் தீவில் அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப நிலைகொள்வதற்கான ஆதரவாளராக நடித்து இந்திய அமெரிக்க கூட்டுத்தலைமைக்குத் தான் உறுதுணையாளராகக் காட்டும் அதே நேரத்தில் சீனாவும் இரசியாவும் வடகொரியாவும் தங்கள் தேவைகளுக்கு இலங்கையில் நிலைகொள்வதையும் தாராளமாக அனுமதிக்கும் நரித்தந்திர ராஜதந்திரியாகவும் இதே ரணில் விக்கிமசிங்காவே விளங்கி வருகிறார் என்பதும் உலகறிந்த உண்மை.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இலங்கைத் தீவில் எல்லாவிதத்திலும் சமத்துவத்தன்மையுடைய இரு தேச இனங்களான தமிழ், சிங்கள தேச இனங்களுக்கும் இலங்கையின் குடிமக்களான இலங்கை முசிலீம்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்குமான பாதுகாப்புடனான அமைதியையும் வளர்ச்சிகளையும் உறுதிப்படுத்தாமல் தனது சிங்கள பௌத்த அரசியற் கொள்கை கோட்பாடுகளுக்கு இலங்கையின் இயற்கை வளங்களையும் மனிதவலுவையும் அரச மூலதனங்களையும் விற்றுத் தனக்கான பிராந்திய மேலாண்மை, அனைத்துலக வல்லாண்மை ஆதரவுகளைப் பெறும் அரசியல்வாதி இந்த ரணில் விக்கிரமசிங்கா.

அவ்வாறே மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களையும் மனித உரிமை வன்முறைப்படுத்தல்களையும் ஈழத்தமிழினத்தின் மீது ‘மக்கள் மேலான போர்’ என்னும் ஜே.ஆர்.ஜயர்த்தனாவின் யுத்தப்பிரகடனத்தையும் இன்று வரை சிங்களப் பெரும்பான்மை அரசாங்கத்தின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்குமான பாதுகாப்பு நடவடிக்கையென நியாயப்படுத்தி உலகின் மூத்த குடிகளான ஈழத்தமிழினத்தின் வரலாற்றுத் தாயகத்தையும் தேசியத்தன்மையையும் தன்னாட்சியைப் பயன்படுத்தி ஈழத்தமிழினம் வாழ்வதையும் அழித்தொழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைமையாகத் தன்னை வெளிப்படுத்தி பாராளுமன்றக் கொடுங்கோன்மையை தனது நிறைவேற்று அதிகாரமுள்ள அரசத்தலைவர் பதவியால் உறுதிப்படுத்தி ஜே.ஆரின் மாவட்டசபைகள் மூலம் ஈழத்தமிழ் மக்களின் உள்ளூராட்சி முறைமையையும் சிங்கள மயப்படுத்தல் என்ற நுணுக்கமான திட்டத்திற்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது திருத்தத்தையும் கீழ்ப்படுத்தி அது கட்டமைத்த வடக்கு கிழக்கு ஒரு நிர்வாக அலகு என்ற அடிப்படையையே மாற்றி அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அரசியல் நரித்தனத்தை இன்று முன்னெடுத்து வருபவரும் இந்த ரணில் விக்கிரமசிங்கா தான்.

மேற்கூறிய இவரின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக இவர் 1946ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (A/ RES/ 96-1) இலக்கப் பிரகடனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனவழிப்பு என்னும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யும் சிங்கள பௌத்த பேரினவாத இனத்தலைவராகவும் தனிநபராகவும் ஏககாலத்தில் செயற்பட்டு வருகின்றார். இனவழிப்புக் குற்றத்தைச் செய்பவர் தனிநபர் நிலையிலும் குற்றவாளியாகவுள்ளார் என்ற 2022ம் ஆண்டுவரை 153 நாடுகளால் கையொப்பமிடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இனவழிப்புத் தடுப்பு மரபுசாசனம் எனச் சுட்டப்படும் 1948ம் ஆண்டின் இனவழிப்புக் குற்றத்தை முற்தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான மரபுசாசனத்தின் படி ரணில் விக்கிரமசிங்கா குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவராக உள்ளார். அத்துடன் இந்த இனவழிப்புத் தடுப்பு மரபுசாசனமானது அதில் கையொப்பமிடாத நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட விடயம் என்ற வகையில் கட்டுப்படுத்தும் என உறுதியாக முடிவுசெய்துள்ள அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற நெறிப்படுத்தலுக்கு அமைய ரணில் விக்கிரமசிங்காவும் அனைத்துலகக் குற்றவிசாரணைக்குரியவராகவே உள்ளார்.

இவரின் அரச தலைவருக்கான சிறப்புரிமை விலக்குகள் சிறிலங்காவின் நாட்டெல்லைக்குள் சிறப்பாகவும் அனைத்துலக மட்டத்தில் பொதுவாகவும் அமையும் விதிவிலக்காகும். இதனைப் பயன்படுத்தியே முன்னைய சிறிலங்கா அரசத்தலைவர்கள் போல் இவரும் இனவழிப்புக் குற்றத்திற்கான அனைத்துலகப் பிடியாணைக்குத் தப்பிப்பிழைத்து வருகின்றார். பிரித்தானியாவைப் பொறுத்த மட்டில் இனவழிப்பு உறுதி செய்யும் சட்டவரைபாக 02.08.2022இல் பிரபுக்கள் சபையில் வெளியிடப்பட்ட சட்ட வரைவின் படி ( Hose of Lords – Genocide determination Bill [HL] – HL Bill 23 of 2023 ) இனவழிப்பு போர்க்காலத்தில் மட்டுமல்ல அமைதியான காலத்திலும் செய்யப்படலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரித்தானிய பாராளுமன்றம் பாதிப்புறும் உலகின் மக்களைக் காக்கக் கூடிய சட்டவரைவிலக்கணங்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பினைக் கொண்டுள்ளது என்பதும் இச்சட்டவரைபால் வலியுறுத்தப்பட்டது. இதனால் பிரித்தானிய பாராளுமன்றம் ஈழத்தமிழ் மக்களுக்கு 2009 இல் இனவழிப்பு நடைபெற்றது என்பதை இச்சட்டத்தின் அடிப்படையில் உறுதி செய்யுமாறு கேட்பதும் அதற்கான சான்றாதாரங்களை நாம் தருவோம் எனப் பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு உறுதிப்படுத்துவதும் பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களின் கடமையாக உள்ளது.

ஒரு தேசிய இனத்தை அல்லது இனத்துக்குரியனவற்றை அல்லது மதக்குழுவை இல்லாதழிக்க வேண்டுமென்னும் நோக்குடன்

அ) அவற்றின் உறுப்பினர்களைக் கொல்வது

ஆ) அவற்றின் உறுப்பினர்களது உள்ளத்தை உடலை மோசமாகப் பாதிப்புறவைப்பது

இ)அவர்களின் இயற்பியலான வாழ்வுக்கான நிபந்தனைகளை முழுமையாகவோ

பகுதியாகவோ அழிக்கக் கூடியனவற்தைத் திட்டமிட்ட முறையில் செயற்படுத்துவது

ஈ) அவர்களின் பிறப்பு வீதத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டுச் செயற்படுத்துவது

உ) அவர்களுடைய சிறுவர்களை இன்னொரு குழுவுக்கு வலுக்கட்டாயமாக மாற்ற முனைவது

என்பன பிரித்தானியாவால் இனவழிப்பு எனச்சட்ட ரீதியாக வரைவு வரையப்பட்டுள்ளது.

இன்றைய சிறிலங்காவின் அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மேற்கூறிய ஐந்து முறையிலான இனவழிப்பு செயற்பாடுகளை பலநிலைகளில் செய்ததற்கும் இன்று செய்து கொண்டிருப்பதற்கும் ஈழத்தமிழர்களிடம் சான்றாதாரங்கள் நிறையவே உள்ளன.

இதனால் பிரித்தானியா உட்பட்ட அனைத்துலக நாடுகளும் இவர் இனவழிப்புக் குற்றத்தைச் செய்த ஒருவராகக் கருதப்பட வேண்டும் என்னும் தனது குடிகளாக வாழும் ஈழத்தமிழர்களின் குற்றப்பதிவுகளைக் கவனத்தில் எடுத்து அவைகுறித்த சான்றாதாரங்களைத் தொகுத்து வகைப்படுத்தி அவற்றின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளின் வழியே நீதியைத் தங்கள் நாட்டின் குடிமக்களாக இன்று வாழும் பாதிப்புற்ற ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக ஈழத்தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் ஈழத்தமிழினத்தைத் தங்கள் தேசிய இனமாகக் கொண்டிருக்கும் தமது குடிமக்கள் என்ற உரிமையின் அடிப்படையில் நாளாந்த வாழ்வுக்கான அவர்களின் உடல், உள நலங்களை உறுதிப்படுத்த உதவ வேண்டுமென்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் பணிவான வேண்டுகோளாக உள்ளது.

இத்தகைய அனைத்துலக நீதி விசாரணைகளின் வழியாகவே ஈழத்தமிழினம் எவ்வாறு அதன் இருப்பில் இருந்து சிறிலங்காவால் இனவழிப்பு செய்யப்படுகின்றது என்ற உண்மைகள் உலகுக்குத் தெளிவாகும் பொழுதே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தீவு தொடர்பாகப் பணியாற்றிய அலுவலர்களின் கூற்றான ‘ ஈழத்தமிழர்களின் உள்ளக வெளியகத் தன்னாட்சி உரிமைகளை கொழும்பு அதிகாரிகள் அனுமதிக்காது இருப்பதே

ஈழத்தமிழர்களின் இன்றைய தேசியப்பிரச்சினையாக உள்ளது’ என்ற அனுபவ மொழி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் மொழியாக மாறுகின்ற நிலை உருவாகும். இதனால் பிரித்தானியத் தமிழர்களாகிய நாம் ரணில் விக்கிரமசிங்கா இன்று பிரித்தானிய அரசின் விருந்தினராக அழைக்கப்பட்ட சிறிலங்காவின் அரசத்தலைவர் என்ற நிலையில் பிரித்தானியாவுக்கு வருகை தராதநிலையில், அவரது தனிப்பட்ட வருகை ஈழத்தமிழர்கள் மேலான அவரின் இனவழிப்பு அரசியலை மேலும் பலப்படுத்துவதற்கான பலநிலை நோக்குகளைக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி அவரின் ஈழத்தமிழின அழிப்பு அரசியற் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அவருடைய வருகைக்கான பலத்த எதிர்ப்பை சனநாயக வழிகளில் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய வெளிப்படுத்த உரிமையுடையவர்களாக உள்ளோம்.

ஈழத்தமிழினத்தின் தாயக இருப்பும் தேசிய வாழ்வும் தன்னாட்சி உரிமையும் பாதுகாப்புறுவதற்கு இந்த அமைதி வழி சனநாயகப் போராட்டம் உலக மக்களினதும் குறிப்பாகப் பிரித்தானிய மக்களதும் அடுத்து அவர் செல்லவுள்ள பிரான்சிய மக்களதும் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் உங்கள் குரல்களையும் எங்களுடன் இணைத்து உதவுங்கள் என்கிற கவனயீர்ப்பாக முன்னெடுக்கப்படுகிறது. இதனை உங்கள் உள்ளங்களில் ஏற்று உலகின் மூத்த குடிகளான ஈழத்தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தங்களுடைய தாயகம் என்ற இறைமையின் அடிப்படையில் தங்களுடைய தேசிய வாழ்வைத் தங்களின் தன்னாட்சி உரிமையின் மூலம் வாழ நீங்கள் உதவுவீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

நன்றி.

வணக்கம்