இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் காணப்படும் நிலங்களும் தேசிய கட்டடங்களும், ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் மயப்படுத்தல் என மறைமுகமான அழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
அந்தவகையில், காலணித்துவ ஆட்சியாளரகள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் “சின்ன இங்கிலாந்து” என பெயர் பெறும் அளவிற்கு உல்லாச பயணத்துறையினர் விரும்பக்கூடிய நுவரெலியாவில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட தற்போதைய மத்திய தபால் நிலைய கட்டடமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை தோண்றியுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா சின்னமாக விளங்கும் பிரதான தபால் நிலையத்தை, வெளி நாட்டவர்களுக்கான சுற்றுலா உணவக விடுதியாக மாற்றும் அரசாங்கத்தின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இயங்கும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒண்றிணைந்த தபால் ஊழியர் முன்னணி, தபால் மற்றும் தொலை தொடர்பு உத்தியோகஸ்தர்களின் சங்கம் உட்பட பொது அமைப்புகள் பல அரசின் இந்த யோசனைக்கான எதிர்ப்பை பதாககள் ஊடாக வெளிக்காட்டியுள்ளனர்.
நுவரெலியா மத்திய தபால் நிலையம், நுவரெலியாவின் அடையாள குறியீடாக காலம் காலமாக அறியப்பட்டு வருகிறது. இது இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து தபால் அலுவலகமாக இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள நுவரெலியா பிரதான தபால் நிலையத்தை பார்வையிட வருவோர் ஞாபகமாக விசேட நேரத்தை ஒதுக்கி நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தந்து வாழ்த்து அட்டைகளையும் ஒரு அடையாளமாக தமது நாடுகளின் உறவுகளுக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும், நுவரெலியாவின் விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான “ஜெட்வின்” நிறுவனத்திடம் ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு பலர் எதிர்ப்புக் காட்டுவதுடன், பிரதானமாக “நுவரெலியா மக்கள் குரல்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இவ் அமைப்பின் செயலாளர் பியசேன கஹந்த கமகே, அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு அரசியல் மற்றும் வியாபார நோக்கமின்றி நுவரெலியாவை பாதுகாக்க பாடுபடும் தமது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் கடும் ஆட்சேபனையை செயலாளர் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக தெரிவிப்பதாக தெரிவித்தார்.