தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அமைச்சர் ஒருவர் கடந்த கால ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றமே அமலாக்கத் துறைக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட பிறகே அமலாக்கத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும், அவரின்உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று, அவர்களின் அலுவலகம், வீடு, தலைமைச் செயலகம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று பிறகே அவர் கைது செய்யப்பட்டார். இது சட்டத்துக்கு உட்பட்டதே. அவர் மீதுள்ள சந்தேகங்கள் மட்டுமல்லாமல் சில ஆதாரங்களின் அடிப்படையிலும்தான் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
அரசியல் காரணங்களுக்காக குற்றத்தைத் திசை திருப்ப மத்தியஅரசின் மீதும், அமலாக்கத் துறையின் மீதும் வீண்பழி சுமத்த தமிழகஅரசு முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை தமிழகஅரசு உணர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா வெளியிட்ட அறிக்கையில், “2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தனது சகோதரி கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது மட்டும் துடிப்பது ஏன்? செந்தில் பாலாஜி வாய் திறந்து ஏதாவது கூறிவிட்டால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில்தான் முதல்வரும், அமைச்சர்களும் பதறிப்போய், ஓடோடி சென்றுஅவரைப் பார்க்கின்றனர், வருமானவரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியை உத்தமர்போல் சித்தரிப்பதை தமாகா இளைஞர் அணிசார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.