வாகனங்களில் பொருத்தும் வகையில் காற்று மாசுபாட்டைக் கண்டறியும் கருவி: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

90 0

வாகனங்களில் பொருத்தும் வகையிலான காற்றுமாசுபாட்டைக் கண்டறியும் கருவியை சென்னை ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு பகுதியில் சில மீட்டர் தூரத்தில் கூட காற்றின் தரம் மாறக் கூடும். எனவே, காற்றின் தரத்தை ஒரே இடத்திலிருந்து கண்காணிப்பது சாத்தியமற்றது. எனவே, வாகனங்களில் பொருத்தும் வகையில் காற்று மாசுபாட்டைக் கண்டறியும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை சென்னை ஐஐடி பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி தலைமையில் செயல்பட்ட ஆராய்ச்சியாளர் குழு உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் காற்றின் தரத்தைக் கண்டறிதல், காற்றின் தரம் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தல், தரவுகளைச் சேகரித்தல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை இருசக்கர வாகனம் உள்ளிட்டஅனைத்து வாகனங்களிலும் பொருத்திக் கொள்ளலாம். இது காற்றின் தரத்தை அளவீடு செய்வதுடன், சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவையும், புற ஊதாக் கதிர் அளவையும், சாலைகளின் தடிமன் போன்றவற்றையும் சோதனை செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இதில் இடம்பெற்றுள்ள ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் தரவுகளைச் சேகரித்து அனுப்பவும் முடியும். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஆய்விதழிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.