இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

85 0

நாட்டில் வாழும் அனைவரும் எமது சகோரத்தர்கள் என்ற சிந்தனை ரீதியிலான மாற்றம் ஏற்படும்வரை நாட்டில் அபிவிருத்தி மற்றும் மனித வாழ்க்கைக்கான பாதுகாப்புத்தன்மையை எதிர்பாக்க முடியாது.

அதனால் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

கலாசார நல்லிணக்கத்தை மக்கள் மயமாக்கும் உலக தரம் வாய்ந்த திரைப்படம் திரையிடுதல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வு நேற்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய ஒருங்கிணைப்பை பாதுகாக்க தேவையாள அளவு சட்ட திட்டங்கள் இருக்கின்றன. சமத்துவத்தை உறுதிப்படுத்த தேவையான அளவு எமது அரசியல் அமைப்பில் உறுப்புரைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் இருந்தும்  எமது நாடு அடிக்கடி இரத்த ஆறில் நிரம்பி வழிகிறது.

1971 கலவரத்தில் 60ஆயிரம் பேர்வரை மரணித்தனர். 83,88 கலவரத்தில் மேலும் ஆயிரம் பேர்வரை மரணித்தனர். வடக்கு கிழக்கு பிரிவினைவாத யுத்தம் காரணமாக மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொள்ளப்பட்டனர். இவ்வாறான நிலையில் எங்களுக்கு எதிர்காலம் தொடர்பில் கனவு காணமுடியுமா?

இவ்வாறான கலாசாரம் இருக்கும் நாடொன்றில் நாங்கள் பொருளாதார அபிவிருத்தி செய்தாலும் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டாலும் நாட்டு மக்களின் எதிர்கால பரம்பரையின் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த அனைத்து விடயங்களையும் செய்வதுடன் நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் எந்த பயனும் இல்லை.

இந்த நாட்டில் வாழும் மக்கள் எமது சகோதரர்கள் எமது பிள்ளைகள் என்ற உணர்வு இருக்க வேண்டும். அந்த உண்வை ஏற்படுத்திக்கொள்ளும்வரை  எமது நாட்டு மக்களின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்க முடியாது

எமது நாட்டு மக்கள் பல்வேறு வகையில் பிளவு பட்டிருக்கின்றனர். சிங்களம். தமிழ், முஸ்லிம் என்றும் ஸ்ரீலங்கா, யூ.என்.பி. ஜேபிபி என்றும் கலாசார ரீதியிலும் பிளவு பட்டிருக்கின்றனர். ஏன் நாங்கள் இவ்வாறு பிளவு பட்டிருக்கிறோம்.

மக்களை பிளவு படுத்தவா ஜனநாயகம் தேவை? ஜனநாயகத்துக்கு மிகவும் இலகுவான வரைவிலக்கணம் பன்முகத்தன்மையின் மூலம் ஒருமைப்பாட்டிற்கு வருவதாகும். ஆனால் நாங்கள் அதற்கு அப்பாற்பட்ட விடயங்களே செய்கிறோம். அதனால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நாங்கள் இந்த நாட்டு மக்களின் சிந்தனை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும்.

எமது அண்டை நாடு இந்தியாவாகும். அங்கு தேசிய மொழியாக 22 மொழிகள் பேசப்படுகிறது. 1640 வரை பிரதச மொழிகள் பேசப்படுகின்றன. சுமார் 200 மொழிகளில் பத்திரிகைகள் அச்சிடப்படுகின்றன. இந்தியா எமக்கு சிறந்த முன்மாதிரியாகும். அந்த நாட்டு மக்கள்  நான் இந்தியாவை சேர்ந்தவன் என்றே கூறுகின்றனர்.

ஆனால் எமது நாட்டில் அதிகமானவர்களுக்கு நான் இலங்கையன் என தெரிவிப்பதற்கு விருப்பம் இல்லை. நான் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றே தெரிவிப்பார்கள். நாங்கள் எமது தாய் நாடு தொடர்பில் கெளரமாக கதைக்க வேண்டும். அந்த மாற்றத்தை நாங்கள் பாலர் பாடசாலையில் இருந்து ஏற்படுத்த வேண்டும். ஆனால் அது எமது நாட்டில் இடம்பெறுவதில்லை. கல்வி அதிகாரிகளுக்கு எந்தளவு சொன்னாலும் அவர்களுக்கு விளங்குவதி்லலை. விளங்கினாலும்  செயற்படுத்துவதில்லை.

தேசிய ஒன்றிணைப்பை ஏற்படுத்த கலை சிறந்த கருவியாகும். கலை மூலம் மனிதர்களின் வாழ்க்கையை மாற்ற முடியுமாகிறது. நாங்கள் இதன் ஆரம்ப வேலைத்திட்டத்தை திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பித்தோம். இன்று முழு நாட்டுக்கும் விரிவுபடுத்தும் வகையில் வேலைத்திட்டத்தை கொண்டுவந்திருக்கிறோம்.

இதன் மூலம் ஒருங்கிணைப்பை பெயரளவில் மாத்திரம் வரையறுக்காமல் யதார்த்தமாக்க முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் மற்ற மக்கள் பிரிவை வெறுப்புடன் கோபத்துடன் பார்ப்பதாக இருந்தால் எங்களுக்கு இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அதனால் நாங்கள் அனைவரும் ஒரே உணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.

இதன்போது மாவட்டம். மாகாணம் மற்றும் பிரதேச மட்டத்தில் அனைத்து மாகாண செயலாளர் காரியாலயங்களிலும் ஒரே நேரத்தில் கலாசாரம் நல்லிணக்கத்தை மக்கள் மயமாக்கும் உலக தரம்வாய்ந்த, கறுப்பு, வெள்ளை இன முரண்பாட்டை சமாதானப்படுத்திய தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டலாவின் சமூக சிந்தனைகளை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள INVICTUS என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.