டென்மார்க்கிலுள்ள 2 ஆயிரம் புலம்பெயர் தமிழர்கள் : கடவுச்சீட்டுக்கான அனுமதியை கோரி அலி சப்ரிக்கு கடிதம்

88 0

டென்மார்க்கில் உள்ள 2 ஆயிரம் வரையிலான புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வர முடியாத நிலையில் உள்ளதாகவும், தம்மிடம் உள்ள டென்மார்க் அரசின் அகதிகளுக்கான பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டுக்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழர்கள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் கோரியுள்ளனர்.

அக்கடிதத்தில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் சட்டத்தின் கீழ் டென்மார்க் அரசாங்கமானது அகதிக் கோரிக்கை விடுப்பவர்களுக்காக பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டை (அலையன்ஸ் கடவுச்சீட்டு) வழங்கி வருகிறது.

இந்த நிலையில், டென்மார்க் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சாதாரண பிரஜைகளுக்கான கடவுச்சீட்டுடன் வருகை தருபவர்கள் மட்டுமே கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பிரவேசிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.

அகதிக் கோரிக்கை விடுக்கப்பட்டு அதனை டென்மார்க் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வழங்கப்படும் பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டு (அலையன்ஸ் கடவுச்சீட்டு) ஆகியவற்றை பயன்படுத்தி இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.

டென்மார்க் அரசாங்கத்தின் சாதாரண பிரஜைகளுக்கான கடவுச்சீட்டை பெறுவதாக இருந்தால், டெனிஸ் மொழியில் பரீட்சயம் இருப்பதோடு அதற்கான பரீட்சையிலும் சித்தியடைய வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில், 2 ஆயிரம் பேர் வரையானவர்கள் அதற்கான ஏதுநிலைமைகளை கொண்டிருக்கவில்லை. அத்துடன், அவர்களில் பலர் டென்மார்க் குடியுரிமையையும் பெற்றுக்கொள்வதற்கு விரும்பவில்லை.

இதேநேரம், கடந்த காலங்களில் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு மேற்படி அகதிகளுக்கான கடவுச்சீட்டை அல்லது பயண ஆவணத்தினை வைத்திருப்பவர்களுக்கு கட்டுநாயக்கவில் எவ்விதமான தடைகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் இருந்தே அதற்கான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

மேலும், குறித்த கடவுச்சீட்டை அல்லது பயண ஆவணத்தை கொண்டுள்ளவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாக இருந்தால் வீசா பெற்றே டென்மார்க்கிலிருந்து வெளியேறுவதால் டென்மார்க் அரசாங்கத்தின் தரப்பில் எவ்விதமான தடையும் இல்லை.

அத்துடன், இவ்வாறான நிலைமையில் உள்ள இலங்கையர்கள் அல்லாத ஏனைய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து குறித்த வகை கடவுச்சீட்டை அல்லது பயண ஆவணத்தைக் கொண்டிருக்கும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தமது சொந்த நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆகவே, கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எவ்விதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடாமைக்கான சான்றுப் பத்திரங்களை கொண்டிருக்கும் எம்மை ஒரு தடவையாவது, தாய்நாட்டை பார்ப்பதற்கு அனுமதி அளிக்குமாறு கோருகின்றோம் என்றுள்ளது.