ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவிருப்பதுடன் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி அமர்வில் வாசிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழர் அமைப்புக்கள், இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஓரங்கமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 கூட்டத்தொடரில் விசேட கவனம் செலுத்தப்படவேண்டிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கில் பின்லாந்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அந்நாட்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ சர்வதேச இராஜதந்திரப் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு கருத்து வெளியிட்ட தமிழீழ சர்வதேச இராஜதந்திரப்பேரவையின் பிரதிநிதி சாரங்கன் கெங்கநாதன், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலை தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படாமை குறித்தும், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முகங்கொடுத்துவரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார்.
அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.