ஈராக்கின் வடபகுதிக்கு சுயஆட்சி உரிமை கோரி போராடிவரும் குர்திஷ்தான் பிரிவினைவாதிகள், அந்நாட்டின் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் மற்றும் துருக்கி நாடுகளுக்கான எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் போராளிகள், அவ்வப்போது துருக்கியின் எல்லையோர பகுதிகளிலும் அதிரடியாக தாக்குதல்களை நடத்துகின்றனர்.
கடந்தவாரம், ராணுவப் புரட்சியின் மூலம் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தலைமயிலான ஆட்சியை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி ஒடுக்கப்பட்ட நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்திஷ் போராளிகளின் தாக்குதல்களுக்கு சமீபகாலமாக துருக்கி இரையாகி வருகிறது.
இந்நிலையில், ஈராக் – துருக்கி எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் போராளிகளை குறிவைத்து துருக்கி நாட்டு போர் விமானங்கள் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் 20 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.