ஒலி,ஒளி ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலம் : ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக அமையக் கூடாது

71 0

ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி பத்திரம் கண்காணிக்கப்பட வேண்டும் ஆனால் அனுமதி பத்திரம் ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக மாற கூடாது.

ஒலி மற்றும் ஒளி ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் தனிமனிதனின் சிந்தனை சுதந்திரத்துக்கு எதிரானது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஊடகங்களுக்கு வழங்கப்படும் அனுமதி பத்திரம்  மாபெரும்  வியாபாரமாக காணப்படுகிறது.செல்வந்தர்களுக்கு மாத்திரம் அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படுகிறது.

ஊடக துறையில் சேவையாற்ற நினைக்கும் தரப்பினர் செல்வந்தர்களிடமிருந்து அனுமதி பத்திரத்தை பெற வேண்டும் என்ற நிலையே தற்போது காணப்படுகிறது.

உத்தேச ஒளி மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்கப்படும் அனுமதி பத்திரம் கண்காணிக்கப்பட வேண்டும்.

அனுமதி பத்திர விநியோகத்தில் சிறந்த வழிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த சட்டமூலம் ஊடகங்களை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாக அமைய கூடாது.1997 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் இதுபோன்ற ஒரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.அப்போது அச்சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

ஊடகங்களை கண்காணிக்கும் அல்லது ஊடகங்களுக்கு வழங்கப்படும் அனுமதி பத்திரம் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

இருப்பினும் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரசியலமைப்பின் 10 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என அப்போதைய பிரதம நீதியரசர் ஜி.பி.எஸ். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களை கண்காணிப்பது வேறு ,ஊடகங்க சுதந்திரம் வேறு என அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளதை அவதானத்திற் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெயரளவு ஜனநாயகவாதி என்பதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம்.தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஒலி மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலம் தனிமனித சிந்தனை சுதந்திரத்துக்கும் ஊடகச் சுதந்திரத்துக்கும் எதிரான ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.ஆகவே இந்த சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் முழுமையாக பரிசீலனை செய்யும் என்றார்.