டெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவது ஒருபோதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப்போவதில்லை

67 0

டெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்  என தெரிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

டெலிகொம் நிறுவனத்தின் சில அதிகாரிகளின் கருத்தை அடிப்படையாகக்கொண்டே தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைகுழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது என  ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

டெலிகொம் நிறுவனம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் கலந்துரையாடப்பட்டு,  அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனை நானும் வாசித்தேன்.

குறித்த அறிக்கை தொடர்பில் அந்த குழுவில் இருக்கும் சில உறுப்பினர்களிடம் இதுதொடர்பாக வினவியபோது, அவர்களுக்கு இதுதொடர்பாக எதுவும் தெரியாது என தெரிவித்தனர். அதனால் இது தொடர்பாக சரத் வீரசேகர எம்.பியுடன் கலந்துரையாட இருக்கிறோம்.

அத்துடன் இந்த அறிக்கை, டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிலர் அங்குவந்து தெரிவித்த கருத்தை மாத்திரம் அடிப்படையாக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அறிக்கையை ஏன் தற்போது அவசரப்பட்டு சமர்பித்தது என்பது தொடர்பில் எமக்கு சில கேள்விகள் இருக்கின்றன.

சாதாரணமாக பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முன்னர், அதனை மிகவும் ஆய்வுக்குட்படுத்தி  பல மாதங்களாக அது தொடர்பில் கலந்துரையாடுவோம். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. அதனால் தற்போது அந்த குழுவில் இருந்து சில உறுப்பினர்கள் விலகி இருக்கிறனர்.

என்றாலும் குறித்த அறிக்கையில் இருக்கும் சில விடயங்கள் ஒன்றுக்குகொன்று முரணாக இருக்கின்றன. அதேபோன்று தொழிநுட்ப அடிப்படையில் பார்க்கும்போது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான பொய்யாகும்.

ஏனெனில் தொழிநுட்ப ரீதியில் அவ்வாறு இருக்க முடியாது. டெலிகொம் தொடர்பாடல் தொடர்பில் நன்கு அறிந்தவன் என்பதுடன் அது தொடர்பில் கற்பித்த பேராசிரியராகவே இதனை நான் தெரிவிக்கிறேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம்  டெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குது தேசிய பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக அமை முடியாது.

உலக நாடுகளின் டெலிகொம் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களிடமே அதிகம் இருக்கின்றன. ஜப்பானிலும் டெலிகொம் நிறுவனம் தனியார் நிறுவனத்திடமே இருக்கிறது. இவர்கள் தெரிவிப்பதுபோல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடியாது. ஏனெனில் அதற்கு தேவையான சட்ட திட்டங்கள் அரசாங்கத்திடம் இருக்கின்றன என்றார்.