ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம்

68 0

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் வகையில் எதிர்வரும் மாதங்களில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்த பிரேரணை ஒன்றை முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில்  உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரை பாரதூரமானது.

தேர்தல் தொடர்பில் மக்களுக்கு அக்கறையில்லை,தேர்தல் குறித்து கவனம் செலுத்த கூடாது என்பதே ஜனாதிபதியின் உரையின் உள்நோக்கமாக காணப்பட்டது.

தேர்தலற்ற சமூகம் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படாது.இலங்கை ஜனநாயக நாடு என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் அவசியமில்லை என அரச தலைவர் குறிப்பிடுவதை அலட்சியப்படுத்த முடியாது.மக்களின் விருப்பத்துக்கு அரசாங்கம் செயற்படும் போது அங்கு சர்வாதிகாரமே தோற்றம் பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ஆற்றிய உரையை அலட்சியப்படுத்த முடியாது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு திரைமறையில் ஜனாதிபதி மேற்கொண்ட சகல முயற்சிகளும் அவரது வார்த்தை ஊடாக தற்போது வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு உயர்நீதிமன்றம்  அறிவித்திருந்தது.

இருப்பினும் நாட்டின் இறுதியானதும் மேன்மை மிக்கதுமான உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது.இதனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நிர்ணயிக்காமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசியல் நோக்கத்துக்காக பிற்போடப்பட்டுள்ள பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலை பிற்போட வேண்டும் என்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்திற்கு ஒரு திருத்தப் பிரேரணையை கொண்டு வரவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு சுதந்திர மக்கள் சபை என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.அத்துடன் ஜனாதிபதி தேர்தலை வெகுவிரைவில் நடத்த சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.அதற்கு சுதந்திர மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கும் என்றார்.