காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை – நவாஸ் ஷெரிப்

473 0

201607201338197619_India-should-hold-plebiscite-in-Kashmir-Sharif_SECVPFஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ள நிலையில் பலியானவர்களுக்காக பாகிஸ்தானில் இன்று துக்கதினம் கடைபிடித்து வருவதுடன் காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த 8-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி புர்ஹான் முசாபர் வானி உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் கலவரத்தை அடக்க பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் 40-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் கலவரத்தில் ஈடுபட்டுவரும் பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தற்போது வெளிப்படையாக ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்று துக்கம் அனுசரிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததையடுத்து, அந்நாட்டின் பல பகுதிகளில் அரசு ஊழியர்கள் உள்பட பலரும் இன்று கருப்பு உடைகளை அணிந்து கருப்பு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.

இதேபோல், பாகிஸ்தான் அரசின் உத்தரவையடுத்து, உலகம் முழுவதும் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களில் பணியாற்றுபவர்களும் இன்று கருப்பு தினத்தை அனுசரித்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்சனையை தங்களுக்கு சாதகமான அம்சமாக மாற்றிக்கொள்ள பாகிஸ்தான் அரசு முயற்சிப்பதையே இது காட்டுகிறது.

இதற்கிடையில், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத், இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நகரை நோக்கி ரத யாத்திரை நடத்தி வருகிறான். பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானிக்கு இன்று  ‘ஜனாசா தொழுகை’ நடத்தவும் அழைப்பு விடுத்துள்ள தீவிரவாதி ஹபீஸ் சயீத், காஷ்மீர் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் வகையில் ஜம்மு-காஷ்மீரை நோக்கி பேரணி நடத்தப் போவதாகவும் நேற்று அறிவித்திருந்தான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்களுக்காக பாகிஸ்தான் இன்று துக்கதினம் கடைபிடித்து வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அங்கு வாழும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நவாஸ் ஷெரிப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காஷ்மீர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக நாம் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்து வருகிறோம். இதன்மூலம் தங்களது உரிமைகளுக்காக போராடும் காஷ்மீரிகளுடன் நாங்கள் துணையாக இருக்கிறோம் என்ற வலிமையான செய்தியை உலகுக்கு நாங்கள் உணர்த்துகிறோம்.

காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான உரிமைக்குரலை இந்தியாவால் ஒடுக்க முடியாது. அவர்கள் விடுதலை அடைந்தே தீருவார்கள். காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. எனவே, அங்கு வாழும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவர்களின் முடிவு என்ன என்பதை அறிய அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

அதைவிடுத்து, காஷ்மீர் விவகாரம் எங்களின் உள்நாட்டுப் பிரச்சனை என கூறும் இந்தியாவின் போக்கு நியாயமானது அல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்தியா நிகழ்த்திவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் கவனித்து வருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். இவ்வாறு நவாஸ் ஷெரிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய பாராளுமன்றத்தில் நேற்று பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ’காஷ்மீர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை. அது வழக்கொழிந்து விட்ட அம்சம். காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதே பிரச்சினைக்கு காரணம். அவர்கள் நமது சொந்த மக்கள். அவர்களை நாம் சரியான பாதைக்கு கொண்டு வருவோம். உண்மையை புரிய வைப்போம்’ என குறிப்பிட்டிருந்தது, நினைவிருக்கலாம்.