அரசாங்கம் தயாரித்து வரும் ஒலி, ஒளிபரப்பு சட்டமூலம் ஊடாக நாட்டில் சிறந்த ஊடக தர்மத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தார்மிக ஊடக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஊடக நிறுவனங்கள் இந்த சட்டமூலத்துக்கு பயப்பட தேவையில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒலி, ஒளிபரப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் தற்போது பலதரப்பினர்கள் மத்தியிலும் கருத்தாடல்கள் இடம்பெற்ற வருகின்றன. இது சிறந்த நடவடிக்கையாகும். எந்தவொரு நாட்டினதும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும்.
நாட்டின் ஜனநாயக தூண்களில் இன்று ஊடகம் முக்கிய இடத்தில் இருக்கிறது. அப்படியானால் நாடொன்றை கட்டியெழுப்ப ஊடகத்தின் பணி உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் ஊடகத்துக்கு என ஒழுக்க நெறி ஒன்று இருக்கவேண்டும்.
ஊடக ஒழுக்க நெறி தொடர்பாக 2016 இல் நாங்கள் கதைக்க ஆரம்பித்தோம். இது தொடர்பாக பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். அந்த வகையில் தற்போது மீண்டும் அதன் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறோம். எந்தொரு விடயத்தை ஒளிபரப்பு செய்யும்போதும் அது தொடர்பில் பூரண பொறுப்பை அந்த ஊடகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று தனிநபர், சமூக பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவை இடம்பெறவேண்டும். ஆனால் அவ்வாறான ஊடக நெறியை பின்பற்றும் ஊடகங்களை எங்களால் காண முடியாமல் இருக்கிறது. கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றால் எமது நாட்டு ஊடகங்கள் செயற்படும் விதத்தையும் வெளிநாட்டு ஊடகங்கள் செயற்படும் விதத்தையும் பார்த்தால் எமக்கு அந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளலாம்.
அதனால் ஊடக தார்மீகம் இருக்கவேண்டும். அதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் ஊடக சுதந்திரம் இருக்கவேண்டும். அதற்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பும் சுதந்திரம் வழங்க முடியாது. இன்று நாட்டில் இருப்பதும் அவ்வாறான சுதந்திரமாகும்.
அதேபோன்று அரசாங்கம் தற்போது தயாரித்துவரும் ஒலி,ஒளிபரப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் பல ஊடக நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் அமைச்சருக்கு எந்த வேளையும் ஊடக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை இரத்தச்செய்யலாம். அத்துடன் இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாடு கொரியாவின் நிலைக்கு செல்லும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
எனவே சட்டமூலம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படாத நிலையிலேயே சிலர் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஊடக பிரதானிகள் மற்றும் சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படும். அத்துடன் தார்மீக ஊடக செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஊடக நிறுவனங்கள் இந்த சட்டத்துக்கு பயப்பட தேவையில்லை என்றார்.