நிந்தவூரில் வர்த்தக நிலையங்கள், பழக்கடைகள், உணவகங்கள், வெற்றுக் காணிகளில் திடீர் சோதனை!

124 0
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள், பழக்கடைகள், சில்லறைக் கடைகள், ஹோட்டல், வெற்றுக் காணிகள் போன்ற அனைத்து பொதுமக்கள் சார் இடங்களிலும் திடீர் சோதனைகள் இன்று (12) இடம்பெற்றன.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இந்த கள சோதனையின்போது, ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் போஷாக்கு மிக்க உணவுகளை கொள்வனவு செய்வதற்கான 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்ய அனுமதி அளிக்கப்பட்ட வியாபார நிலையங்களில் அரிசி, பருப்பு, நிலக்கடலை (தோல் நீக்கியது), ரின் மீன், கடலை, சோயா, முட்டை, பாசிப்பயறு, நெத்திலி கருவாடு முதலிய பொருட்கள் உள்ளனவா என்றும் அப்பொருட்கள் தரமானவையா என்றும் சோதனையிடப்பட்டது.

அத்தோடு, இவை தவிர்ந்த ஏனைய பொருட்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு விற்கப்படக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிபந்தனையை மீறி செயற்படும் வியாபார நிலையங்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும்  எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பழக்கடைகளின் தரத்தைப் பேணும் வகையிலும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அனைத்து இடங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்கவைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய இரசாயனங்கள், இரசாயனம் தெளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கருவிகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.