உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது. தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அநேகமாக கட்டப்பட இருக்கும் இடம் இதுவாகத்தான், ஒரு இடத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது. உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷியா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார். ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷியாவுக்கு டிரோன் வழங்கி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் ஈரான் தொடர்ந்து ரஷியாவுக்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த டிரோன்கள் ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.