2015 – 2020க்கு இடைப்பட்ட காலங்களில் நாட்டுக்கு 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நாட்டில் 5 பேருக்கு ஒருவர் வாகனம் கொள்வனவு செய்துள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என பிரேம்நாத் சீ தொலவத்த எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
2015 ஆம் ஆண்டு ஆறு இலட்சத்து 52 ஆயிரத்து 446, 2016 ஆம் ஆண்டு 4 இலட்சத்து 66 ஆயிரத்து 986, 2017 ஆம் ஆண்டு 4 இலட்சத்து 48 ஆயிரத்து 320, 2018 ஆம் ஆண்டு 4 இலட்சத்து 96 ஆயிரத்து 282, 2019 ஆம் ஆண்டு மூன்று இலட்சத்து 32 ஆயிரத்து 452, 2020 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 2228 வாகனங்னங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு 295.37 பில்லியனுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக 250.06 பில்லியன் வரி வருமானம் பெறப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு 192. 32 பில்லியனுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்கான வரியாக 181.03 பில்லியன் அறவிடப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு 204.17 பில்லியனுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு வரியாக 186.15பில்லியன் அறவிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு 338. 98 பில்லியனுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் வரியாக 198.34 பில்லியன் அறவிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு 211.77 பில்லியனுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கு வரியாக 128.57பில்லியன் அறவிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு 88. பில்லியனுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக 46 பில்லியன் வரியாக அறவிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இந்த காலகட்டத்தில் 1332.51 பில்லியனுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கு வரியாக 991.12 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது.
அந்த வாகனங்கள் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட 62 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சுமார் 100 நிறுவனங்கள் இந்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளன.
எமது நாட்டில் இரண்டு கோடி 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 18 வயதிற்கு குறைவானோர் நூற்றுக்கு 13 வீதமானோர். 70 வயதுக்கு மேற்பட்டோர் நூற்றுக்கு ஐந்து வீதமானோர். அந்த வகையில் நாட்டு மக்களில் நூற்றுக்கு 56 வீதமானோர் ஒரு கோடி 36 இலட்சம் மக்களினால் தான் இந்த ஐந்து வருடங்களில் இந்தளவு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் ஐந்து பேருக்கு ஒருவர் இந்த காலப்பகுதியில் வெளிநாடுகளிலிருந்து வாகனம் கொள்வனவு செய்துள்ளார். இவற்றில் 75 அல்லது 80 வீதமானவை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.